

ராசிபுரம் அருகே மலை மீது ஏறிய இளைஞர் பாறையிலிருந்த தவறி பள்ளத்தில் விழுந்தார். விடிய விடிய தத்தளித்த இளைஞரை அதிகாலையில் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் ஓ.சவுதாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (21). தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் ராசிபுரம் அருகே அலவாய்ப்பட்டியில் உள்ள மலையை சுற்றிப்பார்க்க கிருஷ்ணகுமார் மட்டும் தனியாகச் சென்றுள்ளார்.
சுமார் 500 உயரம் கொண்ட மலையின் உச்சிக்கு சென்ற அவர், அங்குள்ள பாறை மீது ஏறி இயற்கையை சுற்றிப்பார்க்க முயன்றார். அப்போது கால் தவறி நிலை தடுமாறிய கிருஷ்ணகுமார் பாறையையொட்டியிருந்த பள்ளத்தில் விழுந்தார்.
புதர்கள் மண்டியிருந்த அந்தப் பள்ளத்திலிருந்து மேலே ஏறி வருவதற்கு வழி எதுவும் இல்லை. இதையடுத்து தனது செல்போன் மூலம் தீயணைப்புத் துறையினர், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் அளிக்க முயன்றுள்ளார். எனினும், செல்போன் சிக்னல் கிடைக்காததால், யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் செல்போன் சிக்னல் கிடைத்ததையடுத்து, அவரது நண்பர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு பள்ளத்தில் தவறி விழுந்து கிடப்பதை தெரிவித்தார். இதையடுத்து அவர் ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் இறங்கிச் செல்ல வழியில்லாததாலும், இரவு நீண்ட நேரம் ஆனதால் இருட்டாக இருந்ததாலும் மீட்க முடியவில்லை. நேற்று அதிகாலையில் தீயணைப்புத் துறையினர் கிருஷ்ணகுமாரை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
தீயணைப்பு படையினர் அறிவுரை
இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கே.வி.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ராசிபுரம் வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி மலை உள்ளது. 4 சிறு கரடு, அதற்கடுத்து மலை அமைந்துள்ளது. அந்த மலை முழுக்க பாறை மட்டுமே உள்ளது. அதில் ஏறிய கிருஷ்ணகுமார், சறுக்கி 100 அடி பள்ளத்தில் உருண்டுள்ளார். மேலே ஏறி வர வழியில்லை. அவர் பள்ளத்தில் சிக்கிய தகவல் இரவு 8.15 மணியளவில் எங்களுக்குக் கிடைத்தது. அதன் பின், கிருஷ்ண குமார் உறவினர் கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவு நேரத்தில் மலைக்குச் சென்றோம். மலைக்கு நடந்துதான் செல்ல முடிந்தது.
அதிகாலை 3.15 மணியளவில் கிருஷ்ணகுமார், பள்ளத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது. டார்ச் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தோம். அந்த நேரத்தில் கீழே இறங்குவது சிரமம் என்பதால், இரவு முழுக்க அவரிடம் பேச்சு கொடுத்தபடியே இருந்தோம். பின், அதிகாலை 5.45 மணிக்கு பள்ளத்தில் இறங்கி அவரை மீட்டு வெளியே கொண்டுவந்தோம். லேசான சிராய்ப்பு காயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நல்ல நிலையில் இருந்ததால் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதுபோன்ற அபாயகரமான பள்ளம் உள்ள பகுதிக்கு இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரவு முழுவதும் பள்ளத்தில் தத்தளித்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.