

இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுக்க கோரி வரும் 16-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த 11 அமைப்புகள் திட்டமிட்டுள்ளன
இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும், சட்டவிரோதமாக கொலை செய்வதுமாக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசும், தற்போதுள்ள மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக இலங்கை ராணுவத்தின் மீதும் அந்நாட்டின் கடற்படை அதிகாரிகளின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். மேலும், பொய்குற்றச்சாட்டின் அடிப்படையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், மே பதினேழு இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலை கழகம், உட்பட மொத்தம் 11 அமைப்புகள் கலந்துகொள்ளவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.