Published : 18 Aug 2016 05:50 PM
Last Updated : 18 Aug 2016 05:50 PM

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த திமுக ஆட்சியின் போது 2007ல் 16 பேர்; 2008ல் 1405 பேர் என அண்ணா பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பாஜகவின் சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கு 16.08.2016 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை என்பது ஒரு சீர்திருத்தக் கூடம், எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களை தமிழக அரசு முன்கூட்டியே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 2011 முதல் தொடர்ந்து நான் வலியுறுத்தி பேசி வந்துள்ளேன்.

கடந்த 22.01.2016 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் இது குறித்து நான் பேசிய போது பதிலளித்த அப்போதைய சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சுப்ரமணியசாமி தொடந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய இயலாது என்று பதிலளித்தார்.

அதற்கு உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவைப் பயன்படுத்தக்கூடிய முழு உரிமை மாநில அரசுக்கு உண்டு அதில் யாரும் தலையிடமுடியாது (It is an unfettered right) என்று சொல்கிறது. மேலும் ராஜீவ் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 2015ல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக சுப்ரமணியசாமியின் வழக்கு வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யத் தடுக்கவில்லை என்பதையும் விளக்கிப் பேசினேன். எனவே இந்த அடிப்படையில் சிறைவாசிகளின் விடுதலையைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.

தற்போது முன்கூட்டியே வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான சுப்ரமணியசாமியின் வழக்கு காலவதியாகிவிட்ட சூழலில் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசிற்கு எவ்விதத் தடையும் இல்லை.

கர்நாடக மாநிலத்தில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வாழ்நாள் தண்டனைப் பெற்ற வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 348 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432வது பிரிவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில அரசு, தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனைக் காலத்தை முற்றிலுமாகவோ, பகுதியாகவோ குறைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரத்தின் அடிப்படையிலும் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு அதிகமான காலம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள முஸ்லிம் கைதிகள் உட்பட அனைத்துக் கைதிகளையும் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்'' என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x