

ஆண்களைப் போலவே பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று சென்னையில் நடந்த குழந்தை திருமண எதிர்ப்பு கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அருணோதயா, ஆக்சன் எய்ட், தோழமை, மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, ஸ்நேகா உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் மாநில அளவில் ஒரு பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
முடிந்து போன பிரச்சினை என்று பலரால் கருதப்படும் குழந்தை திருமணங்கள் இன்னமும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கின்றன. தெற்கு ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.
இதுபற்றி யூனிசெப் அமைப்பின் குழந்தை பாதுகாப்பு அலுவலர் வித்யாசாகர் கூறுகையில், “இந்தியாவில் 46 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்து விடுகிறது. தமிழகத்தில் இது 1.8 சதவீதமாக இருந்தாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இதனைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம். எனவே ரசிகர் மன்றங்களில், பள்ளிகளில் இளம் பருவத்தினருக்கான குழுக்களில் இதைப்பற்றி பேசி வருகிறோம்” என்றார்.
குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ஐ முறையாக அமல்படுத்த பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். இதுபற்றி வழக்கறிஞர் அஜீதா கூறுகையில், “குழந்தைத் திருமணம் தற்போது சமூகநலத் துறையின் கீழ் உள்ளது. ஆனால் அவர்களுக்கு ஏற்கெனவே அதிக பொறுப்புகள் இருப்பதால், இதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தை சட்டத்தில் சேர்க்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மாவட்ட அளவில் குழந்தை திருமணங்களின் விவரங்களைப் பெற வேண்டும்” என்றார்.
பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை களைதல், குழந்தை திருமண தடைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் அளித்தல் போன்ற நடவடிக்கைகளால் குழந்தை திருமணத்தை தடுக்க முடியும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.