எலைட் மதுக்கடைகளை திறக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை

எலைட் மதுக்கடைகளை திறக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை
Updated on
1 min read

'எலைட்'(ஆடம்பர) மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பா.ம.க. அறிக்கையில்: மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் நவீன மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இத்திட்டத்தின் தொடக்கமாக சென்னை எழும்பூரில் உள்ள அல்சா மால், தனியார் வணிக வளாகத்தில் நவீன ஆடம்பர மதுக்கடை சில நாட்களுக்கு முன் திறந்துள்ளது. அடுத்த கட்டமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ, அதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த எலைட் மதுக்கடைகள் அடுத்த சில வாரங்களில் திறக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இவ்வகை மதுக்கடைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததாலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததாலும் எலைட் கடைகளை திறக்கும் திட்டத்தை கடந்த ஆண்டில் தமிழக அரசு கைவிட்டது.

தற்போது எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்த தமிழக அரசு முயல்கிறது. பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் கூடும் வணிக வளாகங்களில் மதுக்கடைகளைத் திறப்பது பல்வேறு தீமைகளுக்கு வழிவகுக்கும். மதுக்கடைகளை மூட வேண்டிய தமிழக அரசு, புதிய மதுக்கடைகளை திறப்பது சரியல்ல. எனவே இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in