

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் உள்ள வணிக வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்க, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சசிகலா தனக்குத் தானே முதல்வராக கிரீடம் சூட்டிக்கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆளுநரும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். அதிமுகவில் பதவியில் இல்லாதவர்களின் விருப்பமும், பொது மக்களின் விருப்பமும் சசிகலா முதல்வராக வரக்கூடாது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர வேண்டும் என்பதுதான். இன்று தன்னிட முள்ள பண பலத்தை வைத்து பயமுறுத்தி வருகின்றனர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்.
திருச்சியிலிருந்து பொள்ளாச்சிக்கு கிராமங்கள் வழியாகத்தான் வந்தேன். வரும் வழியில் சசிகலா பேனர்களைவிட தீபாவுக்குத்தான் பேனர்கள் அதிகம் வைத்துள்ளனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் என்ன சிகிச்சை அளித்தார்கள் என்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை மருத்துவமனைக்கும், மத்திய-மாநில அரசுகளுக்கும் உண்டு.
மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றவர்கள்தான் முதல்வராக வர வேண்டும். கொல்லைப்புறமாக முதல்வர் ஆவதை மக்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என ஸ்டாலின் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். தற்போது நாங்கள் திமுக கூட்டணியில்தான் உள்ளோம், அது தொடரும். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.