காங்கிரஸ் ஏன்தான் இப்படி செய்கிறதோ?- ராஜபக்சே - மன்மோகன் சிங் சந்திப்பு குறித்து கருணாநிதி வேதனை

காங்கிரஸ் ஏன்தான் இப்படி செய்கிறதோ?- ராஜபக்சே - மன்மோகன் சிங் சந்திப்பு குறித்து கருணாநிதி வேதனை
Updated on
1 min read

இலங்கை அதிபரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார் என்ற செய்தி, தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். காங்கிரஸும் மத்திய அரசும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ புரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூன்று பேரின் விடுதலை குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கூறும்போது, ’எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல.

குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை, அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்’என்றெல்லாம் கூறியிருக்கிறார். மாநில அரசுதான், இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான், அதுகுறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் கேட்கிறான். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார் என்பது தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

சென்னையில், மூன்று இடங்களிலும் ராஜீவ் காந்தி சிலைகளை உடைத்தது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவல கத்துக்கே சென்று தாக்குதல் நடத்தியது போன்ற அரசியல் வன்முறைகளிலும் வக்கிரமங்களிலும் திமுகவுக்கு உடன்பாடு எள்ளளவும் கிடையாது.

இப்படிப் பட்ட செயல்களை தமிழக அரசு அனுமதித் திருக்கக் கூடாது. நுண்ணறிவுப் பிரிவின் மூலம் முன்கூட்டியே அறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

கடந்த 2011-12ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே அறிவித்த எண்ணூர் திட்டத்தைத்தான் ஓராண்டு கழித்து, 2012 மார்ச் 29-ல் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், புதிய அறிவிப்பு போல முதல்வர் படித்தார். அந்தத் திட்டத்துக்குத்தான் இரண்டு ஆண்டுகள் கழித்து அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in