Published : 15 Mar 2017 11:18 AM
Last Updated : 15 Mar 2017 11:18 AM

பேராசிரியர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஜிப்மரில் இன்று கறுப்பு தினம் அனுசரிப்பு

காலியாக உள்ள நூற்றுக்கணக்கான மருத்துவ பேராசிரியர்கள், ஆயிரக்கணக்கான செவிலியர் பணியிடங்களை நிரப்பாத புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து அங்குள்ள பணியாளர்கள் இன்று கறுப்பு தினம் அனுசரிக்க உள்ளனர். அதே நேரத்தில் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜிப்மர் நிர்வாகம் பல்வேறு துறைகளில் மருத்துவ பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை உரிய சமயத்தில் நிரப்பாமல் காலதாமதப்படுத்துகிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2015 செப்டம்பரில் வெளியான காலிப் பணியிடங்களான விவரம் இந்தாண்டு ஜனவரியில்தான் அறிவிக்கப்பட்டது. இந்த காலதாமதத்தினால் திறமையான நிறைய டாக்டர்கள் வேறு மருத்துவமனைக்கு பணியாற்ற சென்று விட்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகளால் மயக்கவியல் போன்ற பல முக்கியமான துறைகளில் பற்றாக்குறை உள்ளது. இதனால் அறுவை சிகிச்சைகள் ரத்தாகின்றன. அறுவை சிகிச்சை கூடங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன.

ஜிப்மரில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. தேவையான செவிலியர்களை விரைவாகவும் நிர்வாகம் பணியமர்த்தவில்லை. இந்திய அரசின் சட்ட நெறிமுறைப்படி ஜிப்மரில் தற்போதுள்ள செவிலியர்களை விட 2,700 பணியிடங்கள் தேவையுள்ளது. புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட ஜிப்மரில் பாதியளவு செவிலியர் பணியிடங்களே உள்ளன. இவ்விரு மருத்துவமனைகளிலும் ஒரே அளவு நோயாளிகள் படுக்கை எண்ணிக்கை உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 1:1 என்ற அளவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் விகிதம் தேவை. ஆனால் அதுபோன்ற நிலை இல்லை.

ஜிப்மர் போன்ற தேசிய அளவிலான மிகப்பெரிய மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பரிசோதனை ஆய்வு கூடங்கள் இல்லை. இதற்கு காரணம் போதிய மருத்துவ ஆய்வாளர்கள் இல்லை. பல வார்டுகள் செயல்படுத்தப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன. அறுவை கூடங்கள் முழு திறனில் உபயோகப்படுத்தப்படவில்லை.

இப்படி பல கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் புதிய திட்டங்களை அறிவிப்பதில்தான் ஜிப்மர் நிர்வாகம் முழு கவனம் செலுத்துகிறது. இது உண்மையான மருத்துவப் பணியில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. தனது இயலாமையை மறைக்க ஜிப்மர் நிர்வாகம் அரசு நெறிமுறைகளை தவறாக சுட்டிக்காட்டி ஊழியர்களை மிரட்டும் வண்ணம் செயல்படுகிறது.

காரைக்காலில் முறையான உள் கட்டமைப்பு மருத்துவமனை, முழு நேர மருத்துவ பேராசிரியர் கள் நியமனங்கள் இல்லாமல் ஒப்பந்த அடிப்படை யில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து செயல்படுத்த உள்ளனர். அத்துடன் காரைக்கால் அரசு மருத்துவமனையுடன் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியை இணைத்து செயல்படுத்துவது மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும். காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரிக்கு முற்றிலும் தனி நிர்வாகம் தேவை.

அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி இன்று (மார்ச் 15) போராட்டம் நடத்த உள்ளோம். இதை கறுப்பு தினமாக அறிவித்து பணியாற்றுவோம். எங்கள் போராட்டத்தினால் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை எந்த விதத்திலும் பாதிக்காது. ஜிப்மர் நிர்வாகம் இதை செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x