

கடல் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் மீனவ பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமே, மீன்பிடி தொழில் மட்டும்தான். கடலையே நம்பி வாழும் ஒரு மீனவ கிராமத்தில், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல், மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. அந்தக் கிராமம், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோரைக்குப்பம் கிராமம்தான்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில், தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில், கோரைக்குப்பம் கிராமமும் தப்பவில்லை. கடற்கரை பகுதியில் இருந்து 30 மீட்டர் தூரத்திலேயே உள்ளது இந்த கோரைக்குப்பம் கிராமம். இங்கு 130 குடும்பங்கள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆழிப்பேரலையின்போது இவர்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடின்றி தவித்த இவர்கள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது, இவர்கள் கோரைக்குப்பத்தில் குடிசை வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை புயல் வரும்போதும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதுகுறித்து, கோரைக்குப்பம் கிராம மீனவர்கள் கூறியதாவது:
“சுனாமியின் போது எங்கள் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. எங்களுக்கு மாற்று இடம் தருவதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. புயல் வரும்போதெல்லாம் திடீரென அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வந்து ஆறுதல் கூறிவிட்டுப் போகிறார்கள். ஆதரவான தீர்வுதான் எங்களுக்கு கிடைத்தபாடில்லை.
புயல் அடிக்கும் நேரங்களில் வைரவன் குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், பொன்னேரியில் உள்ள திருமண மண்டபங்களில் மீனவர்களைத் தங்கவைத்து, பின்னர் புயல் மறைந்ததும் மீண்டும் இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர்.
எங்கள் பகுதியை ஒட்டி அமைந்துள்ள 6 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை எங்களுக்கு மாற்று இடமாக வழங்கக் கோரினோம். அந்த இடத்தை அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பகிர்ந்தளிக்க முயன்ற போது, அந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், அதுவும் கிடைக்காமல் போனது.
அதன் பிறகு, வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையி்ல், தற்போது ஏற்பட்டுள்ள மாதி புயல் காரணமாக, கடல் சீற்றம் அதிகரித்து கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்துள்ளது. அதனால் அச்சத்தோடு வாழ்கிறோம்.
மாற்று இடம் தர மறுத்து வரும் வருவாய் துறையினர் நடவடிக் கையைக் கண்டித்து விரைவில் எங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசின் அனைத்து அடையாளச் சான்றுகளையும் புறக்கணிக்க உள்ளோம்” என்கின்றனர் மீனவர்கள்.