Published : 11 Nov 2014 03:33 PM
Last Updated : 11 Nov 2014 03:33 PM

வெட்டிவேரு வாசம் 9 - ஏமாறாதே, ஏமாற்றாதே!

ஏமாறாதே, ஏமாற்றாதே!

கால் நூற்றாண்டுக்கு முன், நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து ‘உங்கள் ஜூனியர்’ மாத இதழை நடத்திக் கொண்டிருந்தோம்.

ஒரு மாலைப்பொழுது. மூவரும் அடுத்த இதழ்குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம்.

“சார்..” என்று ஒரு குரல் அழைத்தது.

கையிடுக்கில் கனமான ரெக்ஸின் பையை இடுக்கிக்கொண்டு, வாசலில் நின்றிருந்தவருக்கு நடுத்தர வயது. முன் வழுக்கை. வெள்ளை வேட்டி, சட்டை. ஏதேதோ அடைத்து வீங்கிய சட்டை பாக்கெட்.

“வணக்கம்… உங்க மூணு பேரையும் ஒண்ணாப் பார்த்ததே நல்ல சகுனம். என் பேரு திலகன்” (உண்மைப் பெயர் நினைவில்லை).

உள்ளே அழைத்து நாற்காலி கொடுத்தோம்.

“நேரா விஷயத்துக்கு வர்றேன். நான் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜியோட மச்சினன். அவரோட புரொடக் ஷன்ல படத்துக்கு பூஜை போடறதுலேர்ந்து ரிலீஸ் வரைக்கும் ஆல் இன் ஆல் நான் தான். என் மேற்பார்வைல தயாரிச்ச ஒவ்வொரு படமும் சில்வர் ஜூபிலி. போன வாரம் நான் ஏதோ சொல்ல, அவர் ஏதோ சொல்ல… சண்டை கொஞ்சம் பெரிசாயிடுச்சு. என்னைத் தூக்கி எறிஞ்சிப் பேசிட்டார். நானும் உனக்குப் போட்டியா ஒரு தயாரிப் பாளராகிக் காட்டறேன்னு வெளிய வந்துட்டேன்…”

காபி கொடுத்தோம். தொடர்ந்தார்…

“தமிழ் சினிமா, நடிகன் பின்னாடி ஓடிட்டு இருக்கு. அது, எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல. எழுத்தாளருங்களை மதிக்க இண்டஸ்ட்ரி கத்துக்கணும். அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்லாம் உங்க கதைலேர்ந்துதான் நெறைய விஷயத்தைச் சுட்டு சொல்றாங்க. அதனால, நேரடியா உங்களைத் தேடி வந்திருக்கேன். ஒரு புதுப் படம் பண் ணப் போறேன். ஸ்க்ரிப்ட்டைத் தயார் பண்ணுங்க. எந்த நடிகனை வேணாலும் கொண்டு வர்றேன்…”

“டைரக்டர் யாரு..?”

“ஏன், ஒரு எழுத்தாளன் டைரக்டராகக் கூடாதா? ஒவ்வொரு கதைலேயும் சம்பவத்தை சினிமா மாதிரி அழகா எழுதறீங்க. அதைப் படமா எடுக்க உங்க ளால முடியும். நம்பிப் பணம் போட நான் இருக்கேன். அப்புறம் என்ன..?”

“இப்பதான் பாக்யராஜ் சார்கிட்ட உதவி டைரக்டரா இருக்கேன். இன்னும் கத்துக்க வேண்டியது இருக்கு… ” என்று பிரபாகர் இழுக்க...

“சார், நம்பிக்கைதான் முக்கியம். உங்களால முடியும். வாய்ப்புத் தேடி வரும்போது மிஸ் பண்ணாதீங்க. ஆனா, விஷயத்தை வெளிய விடாதீங்க. கலைச்சிருவானுங்க…” என்று ஆரம் பித்து, யாரை இசையமைப்பாளராகப் போடலாம் என்றெல்லாம் பேசினார். எங்கள் தொலைபேசி எண்களை வாங்கிக்கொண்டுப் புறப்பட்டார்.

மூவரும் கலந்தாலோசித்தோம்.

“ஆளைப் பார்த்தா டுபாக்கூர் மாதிரி இல்ல..?”

“நிஜமாவே கே.ஆர்.ஜிக்கு ஒரு மச்சினன் இருந்தாரா? சண்டை போட் டாங்களான்னு விசாரிக்க முடியும்.”

“புது தயாரிப்பாளருங்க மேல வந்த ஃபீல்டுதான் இது. ஒரேயடியா அவரை ஒதுக்க வேண்டாம்...”

மூவரும் கடற்கரை மணலில் அமர்ந்து, சில கதைக் கருக்களை அலசி வைத்துக்கொண்டோம். ஆனால், ஓரத்தில் அந்த ஆள் மீது நம்பிக்கை இல்லாமலே இருந்தது.

இரண்டு நாட்களில் போன் வந்தது.

“கதை ரெடியா..?”

“ரெடி...”

“அதான் எழுத்தாளர்! இதுவே டைரக்டரா இருந்தா, ரூமைப் போட்டு ஆறு மாசம் உட்கார்ந்து தேய்ப் பானுங்க...”

“கதையை எப்போ கேக்குறீங்க..?”

“எதுக்குக் கேக்கணும்..? சூப்பரா தான் பண்ணியிருப்பீங்க. முதல்ல ஆபீஸ் போடறேன். பிரஸ்ஸைக் கூப்பிட்டு நியூஸ் குடுப்போம். இண் டஸ்ட்ரியில அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைப்போம்...”

அவர் கொஞ்சம் ஓவராகப் பேசியது உதைத்தது.

ஒரு வாரம் கழித்து, என் வங்கி எண்ணுக்கு போன் வந்தது.

“திலகன் பேசறேன். கோடம்பாக்கத்துலயே ஒரு சூப்பரான இடத்தைப் பிடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னிக்கே ஆபீஸ் பூஜை போட்டுருவோம்…”

“சரி...”

“அப்புறம் சார், ஒரு விஷயம். ரெண்டு, மூணு இடத்துலேர்ந்து பணம் வர வேண்டியிருக்கு. ஆபீஸுக்கு அருமையான லொகேஷன் கெடைச் சிருக்கு. உடனே அட்வான்ஸ் குடுக்க லேன்னா, கைநழுவிப் போயிடும். ஒரு பத்தாயிரம் குடுத்தீங்கன்னா ரெண்டே நாள்ல திருப்பிக் குடுத்துருவேன்..” என்றார்.

“சார், நாங்க சாதாரண எழுத்தாளர். பத்தாயிரம் ரூபாய்க்கு எங்க போவோம்?”

“சரி, எவ்வளவு முடியும்? ஒம்பது ஆயிரம்..?”

“சான்ஸ் இல்ல...”

“அஞ்சாயிரம்… மூவாயிரம்… ரெண் டாயிரம்..?” என்று அறுநூறு ரூபாய் வரை இறங்கி வந்தார்.

“ஒரு பைசாகூட இல்ல…” என்று போனை வைத்துவிட்டேன்.

அதற்கப்புறம் அவரைக் காண வில்லை. பிற்பாடு ஒருநாள், நண்பர் கார்த்திகா ராஜ்குமாரைச் சந்தித்தபோது நடந்ததைச் சொல்லிச் சிரித்தோம்.

“அடப் பாவிங்களா! எனக்கு முன்னாலயே போன் பண்ணி சொல்லக் கூடாதா? அந்த ஆளு ஊட்டிக்கு வந்தாரு.. உங்ககிட்ட சினிமா. என்கிட்ட டிவி சீரியல்...”

“ஏன் கார்த்திகா… ஏமாந்தியா என்ன..?”

“அந்தக் கதை எதுக்கு?” என்று அவர் பேச்சை மாற்றினார்.

பொதுவாக நாங்கள் மூவருமே முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள். அவ்வளவு சுலபத்தில் யாரையும் நம்பி ஏமாறுவதில்லை.

‘வேலாயுதம்’ படத்தில் சீட்டுப் பணம் ஐந்து லட்சத்தை எடுக்க, ஊரிலிருந்து குடும்பத்தோடு சென்னைக்கு வருவான் வேலாயுதம் (விஜய்). சாதாரணத் திருடனான ஸ்பீடு (சந்தானம்), அந்த ஐந்து லட்சத்தை எப்படியாவது கைப் பற்றிவிட வேண்டுமென்று, வேலாயு தத்தை அடைகாப்பான். பின்னால் வரப்போகும் பணத்துக்கு முதலீடாக நினைத்து, வீட்டுக்கு முன்பணம் கொடுப்பதில் ஆரம்பித்து, சாப்பாடு, துணிமணி என்று அந்தக் குடும்பத்துக்கே ஏகப்பட்ட செலவு செய்வான். செம காமெடியாக இருக்கும். சீட்டுப் பணம் முழுமையாக நாயகனுக்குக் கிடைக்கும்போது, ஸ்பீடைக் கூப்பிட்டு ஒரு செலவுப் பட்டியலைக் கொடுப்பான்.

“நீ இதுவரை செலவு செஞ்ச பணம். யாரையும் ஏமாத்தாதே.. ஒழைச்சிச் சாப்புடணும்... சரியா?” என்று ஏமாறாமல், அந்தத் தொகையை மட்டும் திருப்பிக் கொடுப்பான்.

தாங்க்ஸ் டு ‘திலகன்’!

வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x