Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் நியமனம்

“எனக்கு உரிய பதவி கொடுக்கப் படாதவரை சத்தியமூர்த்தி பவனுக்குள் அடியெடுத்து வைக்க மாட்டேன்’’ என்று கூறிவந்த கார்த்தி சிதம்பரம், கடுமையாக போராடி தனது பிடிவாதத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் டிசம்பர் 9-ல் அறிவிக்கப்பட்டனர். இதில் வாசன் தரப்புக்கு அதிக முக்கியத் துவம் தரப்பட்ட அதேநேரம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் அவரது விசுவாசிகள் சிலருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை என புகைச்சல் கிளம்பியது. கார்த்தி சிதம்பரத்துக்கு முதலில் பொருளாளர் பதவி கேட்கப்பட்டது. அது மறுக்கப்பட்டதால் மாநிலத் துணைத் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் பதவி கேட்கப்பட்டது. ஆனாலும், அவருக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை.

புறக்கணிப்பு

இதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாக, புதிதாக பொறுப்பு அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். ஆனால், சிதம்பரம் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி வைத்தார். ஆனாலும், டிசம்பர் 19-ம் தேதி சென்னையில் நடந்த காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் கூட்டத்தை சிதம்பரத்தின் விசுவாசிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து மாநில நிர்வாகிகள் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு கார்த்தியின் விசுவாசியான கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும், சமாதானமடையாத கார்த்தி சிதம்பரம், தொடர்ந்து டில்லிக்கு அழுத்தம் கொடுத்துக் கொண் டிருந்தார். இதை யடுத்து, புதனன்று, அவர் செயற்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

18 பேரில் 7 பேர் கார்த்தி ஆதரவாளர்கள்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், ’’ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் இப்போது செயற்குழு உறுப்பினர் களாக இருக்கிறார்கள். ’அதற்கு நிகரான பதவி எனக்கு வழங்கப் படாதவரை நானும் எனது ஆதரவாளர்களும் சத்தியமூர்த்தி பவனுக்குள் அடியெடுத்து வைக்கமாட்டோம்’ என்று சபதம் செய்திருந்தார் கார்த்தி. இப்போது புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 18 செயற்குழு உறுப்பினர்களில் ஏழு பேர் கார்த்தியின் ஆட்கள்தான். இவர்களைத் தவிர கன்னியாகுமரி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் தனது ஆதரவாளர்களை மாவட்டத் தலைவர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் கார்த்தி. இதில் ராமநாதபுரம், காஞ்சி மாவட்டத் தலைவர் பதவிகளுக்கு அவர் சிபாரிசு செய்திருந்த நபர்களுக்கு செயற்குழு உறுப்பினர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கார்த்தி விசுவாசி ஒருவர் மாவட்டத் தலைவராக வருவார். மொத்தத்தில் எங்களுக்கு பலம் கூடிக்கொண்டிருக்கிறது’’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x