Published : 02 Feb 2017 04:27 PM
Last Updated : 02 Feb 2017 04:27 PM

ஆரோக்கியமான காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதி: கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாடு

உடல் தகுதியுள்ள ஆரோக்கியமான காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதிச்சான்று வழங்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவனியாபுரத்தில் பிப்.5-ம் தேதியும், பாலமேட்டில் பிப்.9-ம் தேதியும், அலங்காநல்லூரில் பிப்.10-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அனுமதி சான்று அளிக்கும் பணியில் கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜல்லிக்கட்டில் 3 முதல் 7 வயதுள்ள காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அவை திடகாத்திரமாகவும், ஆரோக்கி யமாகவும் இருக்க வேண்டும். எந்த காயங்களும் இருக்கக்கூடாது. கண் பார்வை நன்றாக இருக்க வேண்டும். நோய் அறிகுறிகள், உடல் பலவீனமாக இருக்கும் காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான உடல் தகுதி சான்று வழங்கப்பட மாட்டாது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளை வளர்ப்போர், தங்களின் காளைகளை அந்தந்த பகுதி கால்நடை மருந்தகங்களுக்கு அழை த்துச் சென்று பரிசோதனை செய்து தகுதிச் சான்று பெற வேண்டும். அவர்களுக்கு காளையின் போஸ்ட் கார்டு அளவிலான புகைப்படத்துடன் கூடிய உடல் தகுதிச் சான்று வழங்கப்படும். அதன்பின், வருவாய் ஆய்வாளரை சந்தித்து ஜல்லிக் கட்டில் பங்கேற்க டோக்கன் பெற வேண்டும். அவர்கள் வழங்கும் டோக்கனுடன் வரும் காளைகள் மட்டுமே வாடிவாசலுக்கு கொண்டுவர அனுமதிக்கப்படும். அங்கு மீண்டும் கால்நடை பராமரிப்புத் துறையினர் பரிசோதனை செய்து டோக்கன் வழங்குவார்கள். அதன் பின்னரே வாடிவாசல் வழியாக காளைகள் செல்ல அனுமதிக்கப்படும்.

காளைகளுக்கு போதைப் பொருட்களை வழங்கக் கூடாது. காளைகளின் திமில், உடல், கொம்பு மீது எண்ணெய், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றை தடவி அழைத்துவரக் கூடாது. கொம்புகளை கூர்மையாக்கி கொண்டு வரக்கூடாது என்பவை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாடுபிடி வீரர்களை சுகாதாரத் துறை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, சில கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிப்பார்கள் என்றனர்.

350 காளைகளுக்கு மட்டும் அனுமதியா?

உச்ச நீதிமன்ற தடை காரணமாக 2015, 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் காரணமாக மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனால், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை காண நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிக அளவிலான காளைகள் அழைத்து வரப்பட வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக போட்டி நேரம் அதிகரித்து சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். இதைத் தவிர்க்க ஜல்லிக்கட்டில் அதிகபட்சம் 350 காளைகளை மட்டுமே அனுமதிக்கும் வகையில் தகுதிச்சான்றுகளை வழங்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x