Published : 21 Feb 2014 09:50 AM
Last Updated : 21 Feb 2014 09:50 AM

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?- தே.மு.தி.க.வுக்கு முதல்வர் காரசார பதில்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் வியாழக்கிழமை நடந்தது. அதில், தே.மு.தி.க துணைத்தலைவர் மோகன்ராஜ் பேசியபோது அமைச்சர்களும் முதல்வரும் குறுக்கிட்டு விளக்கமளித்தனர். அப்போது கடும் விவாதம் ஏற்பட்டது. அதன் விவரம் வருமாறு:

மோகன்ராஜ் (தே.மு.தி.க): தமிழகத்தின் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்கள் மீது கடன் சுமை ஏறுகிறது. அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி வட்டி செலுத்த வேண்டி இருப்பதாகவும், வரி வருவாய் குறைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:– நான் ஏற்கெனவே விளக்கம் அளித்தபடி, தமிழக அரசின் கடன், வரம்புக்குள் உள்ளது. உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. அது தமிழ்நாட்டையும் பாதித்து இருக்கிறது. என்றாலும் இந்திய அளவில் குறைவான அளவில் கடன் வாங்கியுள்ள 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

மோகன்ராஜ்:– மணல் விலை உயர்வு காரணமாக கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் போன்ற பகுதிகளில் பெரும் பாதிப்பு உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்:– தமிழகத்தில் 34 இடங்களில் மணல் கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. முதல்– அமைச்சரின் தீவிர நடவடிக்கை காரணமாக மணல் விற்பனை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் சீராக, குறைந்த விலையில் மணல் கிடைக்கிறது.

மோகன்ராஜ்: தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.1 சதவீதமாக குறைந்து விட்டது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறினாலும் கொலைகள், கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்:– மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுகுறித்து முதல்–அமைச்சர் ஏற்கனவே இந்த சட்டமன்றத்தில் விவரமாக பேசியுள்ளார்

மோகன்ராஜ்:– நான் இதை குற்றமாக கூறவில்லை. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் கூறுகிறேன். செங்கல்பட்டு பகுதியில் அரசியல் கொலைகள் அதிகம் நடந்துள்ளது. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அமைச்சர் பன்னீர்செல்வம்:- பொதுவாகப் பேசக்கூடாது. உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா:– உறுப்பினர் பேசும்போது இந்த ஊரில் கொலை நடந்தது, அந்த ஊரில் கொலை நடந்தது என்று கூறுகிறார். குற்றங்கள் நிகழாத நாடு இல்லை, ஊர் இல்லை. பல்வேறு குற்றங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1 லட்சம் பேருக்கு எத்தனை குற்றம் என்பதை வைத்துத்தான் குற்ற விகிதாச்சாரம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே தமிழகத்தில் குற்றங்கள் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்தபோது பேசி இருக்கிறேன். அப்போது உறுப்பினர் அவைக்கு வரவில்லை.

எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக குற்றங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதை சரியாக தெரிந்து கொள்ளாமல் உறுப்பினர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். நான் சட்டமன்றத்தில் பேசியுள்ள உரை அனைவருக்கும் புத்தகமாக வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.குற்றங்கள் நடந்தால் அதற்கு உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படுகிறது. எங்கேயாவது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அதை உறுப்பினர் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரவைத் தலைவர் தனபால்:– குற்றச்சாட்டோ, புள்ளிவிவரங்களையோ கூறுவதாக இருந்தால் என்னிடம் ஆதாரத்தை கொடுத்து விட்டு பேசவேண்டும்.

இதற்கு தே.மு.தி.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா:– புகாரை எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் முனுசாமி:– எழுந்து நின்று சத்தம் போட்டு சபையில் இருந்து வெளியேற தே.மு.தி.க.வினர் முயற்சிக்கிறார்கள்.

(அப்போது தேமு.தி.க. உறுப்பினர்கள் உட்கார்ந்து கொண்டு கையை நீட்டி பேசினார்கள்).

பேரவைத்தலைவர்:– (சந்திரகுமாரை பார்த்து) உறுப்பினர்கள் உட்கார்ந்து கொண்டு சபாநாயகரை நோக்கி கையை நீட்டி பேசுவது முறையல்ல.

ஓ.பன்னீர்செல்வம்:– குற்றச்சாட்டு சொல்வ

தாக இருந்தால் பேரவை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரிடம் ஆதாரத்தை கொடுத்து பதிவு செய்யவேண்டும்.

மோகன்ராஜ்:– சேலத்தில் குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் அங்கு நிறைவு செய்யப்படாததால் பொதுமக்கள் சாலையில் செல்லவே சிரமம் ஏற்படுகிறது.

அமைச்சர் முனுசாமி:– சேலத்தில் குடிநீர் வழங்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோகன்ராஜ்:– தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 503 போலீஸ் பணியிடங்கள் இருப்பதாகவும், அதில் 10 ஆயிரம் போலீஸார்தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மற்ற காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா:– நிதிநிலை அறிக்கையில் என்ன இருக்கிறது என்று சரியாக படிக்காமலேயே எதிர்க்கட்சி துணைத் தலைவர் இங்கு பேசுகிறார். எனது தலைமையிலான அரசு 24 ஆயிரத்து 503 புதிய பணியிடங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்காக 10 ஆயிரத்து 99 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர் இந்த எண்ணிக்கையை போலீஸ் பணியிடங்களுடன் ஒப்பிடுகிறார். இது வேறு. அது வேறு.

காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பணியிடங்கள் நிரப்பப்படும். உறுப்பினர் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இங்கு பேசக்கூடாது. காவல்துறை காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதை நிறைவேற்றி காவலர்களை நியமிக்க குறைந்தது 1½ ஆண்டுகள் ஆகும் உடனே அவற்றை நிரப்ப முடியாது.

இதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், வீட்டுவசதித்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் குறுக்கிட்டு, மோகன்ராஜுடன் வாக்குவாதம் செய்தனர். இறுதியில், அவர் பேசிக் கொண்டிருந்தபோதே முதல்வர் ஜெயலலிதா எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x