Published : 22 Nov 2014 08:43 AM
Last Updated : 22 Nov 2014 10:18 AM
`மது இல்லா இந்தியா’ என்ற மாணவர்களின் தீப ஒளிச்சுடர் தொடர் ஓட்டப் போராட்டப் பயணத்துக்கிடையில் சசிபெருமாள், திருப்பூரில் நேற்று `தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி:
மதுவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டக் களத்துக்கு வருகிறார்களோ?
`மது இல்லா இந்தியா’ என்ற தீப ஒளிச்சுடர் ஏந்தி, டிச.23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் தொடர் ஓட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சென்னை மெரினா கடற்கரையில் சங்கமிக்க உள்ளனர். இது, மதுவுக்கு எதிராக மாணவர்களின் மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்.
வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கும், கேரளாவில் மதுவை ஒழிக்க முயற்சி எடுத்து வரும், அந்த மாநில முதல்வர் உம்மன்சாண்டிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். புதுச்சேரி முதல் வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்கும் இப்போராட்டம், மதுவுக்கு எதிராக தமிழகத்தில் கவனம் பெறும்.
இலக்கு வைத்து மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பூரண மதுவிலக்கு என்பது எப்படி சாத்தியம்?
சரித்திரப் பெருமை வாய்ந்த தமிழகத்தை, 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சாராய முதலாளிகள் ஆண்டு வரு கிறார்கள். அப்படி ஒரு கரும் புள்ளி வரலாறாக, தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். சாராய சாம்ராஜ்யத்தை நடத்த, சட்டமன்றத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.
அடுத்தவர் காய்ச்சினால் கள்ளச்சாராயம்; அரசே காய்ச்சி னால் நல்ல சாராயம் என்று விற்கிறார்கள். இதனால், இலங்கையில் இனப் படுகொலை நடந்ததுபோல், தினமும் தமிழகத்தில் சாராயப் படுகொலைகள் நடந்து வருகின்றன.
சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைவரும் போராட களம் இறங்கியுள்ளார்கள். இது 2-வது சுதந்திரப் போராட்டமாக மாறி யுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக-வை தவிர்த்து, மதுவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், கைகோக்க வேண்டும்.
அதிமுக, திமுக தவிர்த்து என்று சொல்வதற்கு என்ன காரணம்?
இந்த இரண்டு கட்சிகளின் பினாமிகளின் பெயரிலும், நேரடியாகவும் தமிழகத்தில் 14 சாராய ஆலைகள் உள்ளன. அதன் மூலமாக, ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகின்றனர். இந்த வருமானத்தை இழக்க அதிமுக, திமுக கட்சிகள் தயாராகவும் இல்லை; பூரண மதுவிலக்கை அமல்படுத்த அக்கறையும் இல்லை. ஒரு துளி பேனா மையால், தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தை ஆட்சியாளர்களால் மாற்ற முடியும். சாதி, மதம், கட்சிகளால் பல்வேறு கூறுகளாக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 120 தொகுதியில், தலா 80 ஆயிரம் வாக்குகள் வாங்கினாலே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்.
1971-ம் ஆண்டு, தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்று வரை அது தொடர்வது பெரும் வேதனை. மதுவிலக்கு துறை என்பதைவிட, மது விற்பனைத் துறை என மாற்றிவிடலாம்.
இந்த ஆண்டில் இவ்வளவு கோடி வருமானம் வேண்டுமென, அமைச்சரே இலக்கு நிர்ணயிக் கிறார். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது? இப்போது மதுவுக்கு எதிராக மாணவர்கள் களம் இறங்கு கிறார்கள். இதற்கு அரசு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.