உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: முதல் நாளில் 4,748 பேர் மனு தாக்கல் - அக்டோபர் 3-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: முதல் நாளில் 4,748 பேர் மனு தாக்கல் - அக்டோபர் 3-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்
Updated on
1 min read

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4,748 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின்படி, மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கிறது. நேரடி தேர்தல்கள் முடிந்து, உறுப்பினர்கள் பதவியேற்ற பின் நவம்பர் 2-ம் தேதி மறைமுகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

வேட்புமனு தாக்கல்

இந்த உள்ளாட்சித் தேர்தலுக் கான, முழு தகவல்களும் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சுயேச்சையாக பலர் மனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் மொத்தம் 4,748 பேர் மனு தாக்கல் செய்துள்ளாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்சிகளை பொறுத்தவரை, அதிமுகவில் மட்டுமே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இன்னும் சில தினங்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்பதால், அடுத்த சில தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. குறிப்பாக, செப்டம்பர் 30-ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் அன்று வேட்புமனு தாக்கல் அதிக அளவில் நடக்கும் என கூறப்படுகிறது.

இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் 4-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை 6-ம் தேதி மாலை 3 மணிக்குள் திரும்ப பெற வேண்டும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதிமுகவினர் இன்று மனு

அதிமுகவைப் பொறுத்தவரை 12 மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், 31 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங் களுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.

இதைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி கவுன்சிலர்கள் , மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பகல் 12.05 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in