

சென்னை நகரில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பற்றிய விவரங்களை, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் பகுதி காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடர்பாக, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்த் பொது நல மனுவில், 'குற்றவியல் சட்டம் 144-வது பிரிவின் கீழ் சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகரில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பற்றிய விவரங்களை அருகேயுள்ள காவல் நிலையங்களில் அந்தந்த வீடுகளின் உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
குற்றவியல் சட்டம் 144-வது பிரிவின் கீழ் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற தகவல்களை தருமாறு நாட்டின் குடிமக்களை கட்டாயப்படுத்த முடியாது.
ஆகவே, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவு செல்லாது எனக் கூறி, நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும்' என்று அந்த மனுவில் புகழேந்தி கூறியுள்ளார். இதே கோரிக்கைக்காக வழக்கறிஞர் எம்.துரைசெல்வன் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த இரு மனுக்களும் இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்துக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.