

கருணாநிதி குறித்து அதிமுக உறுப்பினர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆளுநர் உரையை கிழித்தெறிந்த திமுக உறுப்பினர் சிவசங்கர், கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விவாதத்தைத் தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசினார். அப்போது அதிமுக - திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன் விவரம் வருமாறு:
மார்க்கண்டேயன் (அதிமுக): ஆளுநரின் உரையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று அவையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தது ஜனநாயக மாண்பு அல்ல.
திமுக தலைவர், காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து தனது மகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகைகளுக்கு தெரிவித்து நாடகம் நடத்துகிறார். அவர் போலீசில் புகார் செய்திருந்தால், மு.க.அழகிரியை நம் முதல்வர் கைது செய்திருப்பார்.
(இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து குரல் எழுப்பியபடியே பேரவைத் தலைவர் தனபாலிடம் சென்று வாக்குவாதம் செய்தனர். ஜெ.அன்பழகன், பேரவைத் தலைவரைப் பார்த்து, கோபத்துடன் கையை நீட்டிப் பேசினார்.)
பேரவைத் தலைவர்: இது முறையல்ல. எல்லோரும் இருக்கைக்குப் போங்கள். பேரவைத் தலைவரை யாரும் நிர்பந்திக்க முடியாது. அதிமுக உறுப்பினர் பேசியதும், துரைமுருகன் பேச வாய்ப்பு தருகிறேன்.
(திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பேரவைத் தலைவரை சூழ்ந்து வாதிட்டனர்)
அன்பழகன் வெளியேற்றம்
துரைமுருகன்: ஆளுநர் உரைக்கு தேவை இல்லாத, சம்பந்தம் இல்லாத விஷயங்களை உறுப்பினர் பேசியிருக்கிறார். அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
பேரவைத் தலைவர்: அதை படித்துப் பார்த்துவிட்டு பிறகு முடிவு எடுக்கிறேன்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேரவைத் தலைவரிடம் கையை நீட்டி பேசினார். அவை மரபை மீறும் வகையில் நடந்துகொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்).
பேரவைத் தலைவர்: உறுப்பினர் ஜெ.அன்பழகன், அவை நடவடிக்கையை மீறும் வகையிலும் பேரவைத் தலைவரை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டதால் அவரை வெளியேற்ற உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டதும் சபைக் காவலர்கள் வந்து ஜெ.அன்பழகனை வெளியேற்றினர்.
அமைச்சர் கே.பி.முனுசாமி: திமுக தலைவர், அவரது மகன் பற்றி கொடுத்த பேட்டி, அவர்களது குடும்பத் தொலைக்காட்சி உள்பட அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்கள் மனதில் பதிந்து இருக்கிறது.
துரைமுருகன்: ஆளுநர்
உரைக்கும் உறுப்பினரின் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
(அப்போது அதிமுகவை விமர்சிக்கும் வகையில் சில வார்த்தைகளை துரைமுருகன் கூறினார்.)
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக உறுப்பினர், தவறான வார்த்தையைப் பேசவில்லை. இவர்களது தலைவரின் பிரச்சினையை நாடே அறிந்துள்ளது. அதை ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.? துரைமுருகன் கூறிய வார்த்தைகளை நீக்க வேண்டும்.
பேரவைத் தலைவர்: துரைமுருகன் பேசியது, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
அமைச்சர் கே.பி.முனுசாமி: ஒரு தலைவர், தனது மகனே இன்னொரு மகனை கொலை செய்யப் போவதாக பேட்டி கொடுத்துள்ளார். ஒரு குடும்பத்தை சரி செய்ய முடியாதவர் நாட்டை எப்படி சரி செய்ய முடியும்.?
(அப்போது திமுக உறுப்பினர்கள் எல்லோரும் எழுந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆளுநரின் உரை நகலை பேரவைத் தலைவர் அருகில் சென்று கிழித்தார்)
கூண்டோடு வெளியேற்றம்
பேரவைத் தலைவர்: திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறேன்.
இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அவை வராண்டாவிலும் அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர். சட்டமன்ற திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை பேரவைக்கு வரவில்லை.