

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித் துள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு நேற்று கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படு கிறது. எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஏற்ப பொறியியல் கலந்தாய்வு மாற்றியமைக் கப்படும் என்று உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 527 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை நடைபெற்றது. உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி உள்ளிட்டோர் முன்னிலையில் கணினி மூலம் 10 இலக்க ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் தங்களுக்கான ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம். ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடர்ந்து உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்படும் என்றும் முதல் கட்ட கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தரவரிசைப் பட்டியல் 22-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். கலந்தாய்வு 27-ம் தேதி என்று அறிவிக்கப் பட்டாலும், ‘நீட்’ நுழைவுத்தேர்வு முடிவு, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை பணி ஆகியவற்றை பொருத்து மாற்றியமைக் கப்படும். இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பொறியியல் கலந்தாய்வில் 527 கல்லூ ரிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு 11 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மூடப் பட்டுள்ளன. பெரும்பாலும் எலக்ட்ரா னிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப் யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் கைவிடப் படுகின்றன. தனியார் பொறியியல் கல்லூரி களுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. எனவே, விரைவில் புதிய கல்விக் கட்டணம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு சுனில் பாலிவால் கூறினார்.
கடந்த ஆண்டு 27 மாணவர்களுக்கு ரேண்டம் எண்ணை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டு 53 கட்டிடக்கலை கல்லூரிகள் செயல்படுகின்றன. பி.ஆர்க் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர ஜூன் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.