

குரோம்பேட்டையின் கிழக்குப் பகுதியில் உள்ள ராதாநகர், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பாரதி புரம் ஆகிய பகுதிகளையும், ஜிஎஸ்டி சாலையும் இணைக்கும் வகையில், குரோம்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகில், சுரங்கப் பாலம் அமைக்க கடந்த 2007-க்கு முன் திட்டமிடப்பட்டது. 30 ஆண்டு கனவு நிறைவேறப்போவதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரூ.14.75 கோடியில், இலகு ரக வாகனங்கள் செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. நெடுஞ் சாலைத்துறை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து செயல்படுத்த வேண்டிய இத்திட்டத்தில், ரயில்வே தரப்பில் ரயில் பாதைக்கு கீழ், கான்கிரீட் பாக்ஸ்கள் அமைக்கப் பட்டன. இதில், பாறைகள் இருந்த தால் அவை வெட்டி எடுக்கப்பட்டு, ரயில்வே துறையின் பாதை அமைக் கும் பணிகள் முடிக்கப்பட்டன.
ரயில் பாதைக்கு கிழக்குப் புறம் 1935 சதுர மீட்டர், மேற்கு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான 900 சதுர மீட்டர் நிலமும் இத்திட் டத்துக்கு தேவைப்பட்டது. இதை கையகப்படுத்தும் பணியை நெடுஞ் சாலைத்துறை, வருவாய்த் துறை யினர் மேற்கொண்டனர். அதன் பின் எந்த பணிகளும் நடக்கவில்லை.
ரயில்வே தரப்பு பணிகள் முடிந்த பின்னரும் கடந்த 9 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இதனால் பணிகள் நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது.
கேட் மூடப்படும் போது ரயில் பாதையை கடக்கும் பொதுமக்களில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 30 பேராவது ரயிலில் அடிபட்டு இறப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல்லாவரம் நகராட்சியை நேற்றும் முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, குரோம்பேட்டை யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக மக்கள் கோரி வரும் இந்த சுரங்கப்பாலம் வருமா வராதா என்பது குறித்து அறிய விரும்புகிறோம். முதலில் நிலப் பிரச்சினை இருப்பதாக கூறிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது, வாகன சுரங்கப்பாலம் அமைக்க முடியாது. சுரங்க நடை பாதைதான் அமைக்க முடியும் என கூறுகின்றனர். நகராட்சியும் அதே பதிலை கூறுகிறது.
நெடுஞ்சாலை ஆராய்ச்சிப்பிரிவி னர் ஆய்வுகள் நடத்தி இலகு ரக வாகன பாலம் அமைக்கலாம் என தெரிவித்தனர். அதை செயல் படுத்துவதில், ரயில்வே நெடுஞ் சாலைத்துறை மற்றும் பல்லாவரம் நகராட்சி இடையில் ஒருங்கிணைப்பு இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
இங்கு இல்லாவிட்டாலும், வைஷ்ணவா கல்லூரி செல்லும் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்க முடியுமா என கேட்டால், இலகு ரக வாகன பாலம் அமைக்க முடியும். இதற்கான திட்ட அறிக்கை ரயில்வே துறைக்கு அனுப்பிவிட்டதாக நெடுஞ்சாலைத் துறையினர் கூறினர். ஆனால், அது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது அப்படி எதுவும் தங்களுக்கு வரவில்லை என ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
ரயில் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், ரயில்களின் இயக்கத்தையும் துரிதப்படுத்தலாம். ஆனால், இதற்காக எந்த நடவடிக் கையையும் ரயில்வே நிர்வாகமும் எடுக்கவில்லை. தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால் விரைவில் இத்திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.