திருப்போரூர் அருகே சிவன் கோயிலில் மரகத லிங்கம் திருட்டு

திருப்போரூர் அருகே சிவன் கோயிலில் மரகத லிங்கம் திருட்டு
Updated on
1 min read

திருப்போரூர் அருகே உள்ள இள்ள லூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 400 ஆண்டுகள் பழமையான கற்பகாம்பாள் உடனுறை சுயம்பு ஈஸ்வரர் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகளும், மரகதத்தால் ஆன லிங்கம் ஒன்றும் இருந்தது. நேற்று மரகத லிங்கத்தின் மேல் பகுதியைப் பெயர்த்து மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைரேகை பதியாமல் இருப்பதற்காக கோயில் தாழ்ப்பாளில் எண்ணெயை ஊற்றிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். சில நாட்களுக்கு முன்பு இள்ளலூர் கிராமத்துக்கு நன்கொடையாளர்கள் போல் வந்த இருவர், கோயிலுக்கு விரைவில் நன்கொடை தருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, இரவு நேரத்தில் சிலர் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடியுள்ளனர். இதைக் கண்ட பொதுமக்கள் சத்தம் போடவே தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனம் போலீஸார் வசம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குழு அமைத்து, இரவு நேரங்களில் கோயிலுக்கு காவல் இருந்துள்ளனர். நேற்று மழை பெய்ததால் கோயில் காவலுக்கு யாரும் வரவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் மரகத லிங்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

அசாதாரண சூழல் நிலவிய போதே இக் கோயில் விவகாரத்தில் போலீஸார் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த திருட்டைத் தடுத்திருக் கலாம் என்கின்றனர் இள்ளலூர் பொது மக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in