Published : 24 Feb 2017 03:08 PM
Last Updated : 24 Feb 2017 03:08 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்: முத்தரசன்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நெடுவாசல் பகுதியில் அமைக்க உத்தேகித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சிறு விவசாயிகளின் நிலங்களை குத்தகைக் எடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு குழாய்களும் அமைத்துள்ளது.

குறிப்பாக வானக்கண்காடு என்ற கிராமத்தில் (கரம்பக்குடி ஒன்றியம்) ராமைய்யா, கோவிந்தராஜ், வீரப்பன் உட்பட நான்கு விவசாயிகளிடமிருந்து சுமார் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ஆயிரம் அடிக்கு மேல் ஆழத்தில் குழாய் அமைத்துள்ளனர்.

எண்ணெய் எடுக்காமல் குழாயை மூடிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் குழாய் வழியாக எண்ணெய் வெளியே வந்து சிமென்ட் தொட்டி முழுவதும் நிரம்பி வயல்வெளிகளில் வழிந்தோடிக் கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகமோ, ஒ.என்.ஜி.சி நிறுவனமோ இதனை முற்றாக தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் தீ விபத்து போன்ற அபாயகரமான சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் நிரம்ப உள்ளது. அத்துடன் வயல் வெளிகள், விவசாயம் பாதிக்கப்படும் பெரும் அபாயம் உள்ளது. எண்ணெய் கசிவால் அங்குள்ள சீமைகருவை மரங்களே கருகிய நிலையில் உள்ளது.

இதனைப் போன்று கர்க்காகுறிச்சி கீழுத்தெரு பகுதியில் மண்பாண்டம் செய்யக்கூடிய குயவர்கள் கோவிந்த வேளார், குழந்தை வேளார், ராமு வேளார் மற்றும் ஒரு விவசாயி ஆகிய நான்கு விவசாயிகளுடைய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் அமைத்துள்ளது.

இதே போன்று கோட்டைக்காடு கிராமத்திலும் குழாய் அமைத்துள்ளனர். நெடுவாசல் கிராமத்தில் பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை குத்தகை;கு எடுத்து சர்வே செய்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்கிற விவசாயின் நிலத்தை எடுக்க முயன்றுள்ளனர். அவர் மறுக்கவே, அவரை காரில் திருவாரூக்கு அழைத்துச் சென்று, அதிகாரிகள் சூழ்ந்து அச்சுறுத்தி உள்ளனர்.

ஒ.என்.ஜி.சி நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போதுள்ள கரம்பக்குடி வட்டம் என்பது தஞ்சை மாவட்டத்துடன் இணைந்த காவிரி பாசன மாவட்டத்தை சேர்ந்த கடைமடை பகுதியாகும். புதுக்கோட்டை மாவட்டம் தனியாக அமைக்கப்பட்ட போது கரம்பக்குடி வட்டம் புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

நெடுவாசல் மற்றும் அதனை சுற்றுயுள்ள கிராமங்கள் கீழ் ஊற்றுத் தண்ணீர் கிடைக்கக் கூடிய ஒர் வளமான பகுதியாகும். இக்கிராமங்களுக்கு நேரிடையாக சென்றால் அங்குள்ள நிலவளத்தை உணரமுடியும்.

பல்லாயிரக்கணக்கான பலாமரங்களை திரும்பும் திசையெங்கும் உள்ளது. ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான பலாக்காய் தொங்குவதை காண கண்கோடி வேண்டும்.

பலா மட்டுமல்ல, மா, வாழை என முக்கனிகளும் நிரம்ப கிடைக்கும் பகுதி மட்டுமல்ல, நெல், கரும்பு, நிலக்கடலை, சவுக்கு, தேக்கு என பசுமை நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால் விவசாயம் முற்றாக அழியும், நிலத்தடி நீர் உருஞ்சப்பட்டு கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடும் நிச்சயமாக ஏற்படும், பசுமை நிறைந்தபகுதி பாலைவனமாக மாறும் பேராபயம் ஏற்படும் நிலை உள்ளதை இப்பகுதி மக்கள் உணர்ந்த காரணத்தால் கிராம மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு, போராட்டக்குழு அமைந்து, போராட்ட அலுவலகம் திறக்கப்பட்டு அங்கிருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்கள் என அனைவரும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல் இணைஅமைச்சர் அனில் மாதவ்தவே இங்கு நடைபெறும் போராட்டங்களை அறிவோம் என்றும், இது தொடர்பாக பரிசீலிப்போம் என்று கூறியவர். தற்போதைய நிலையில் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலை திரும்பப் பெறும் யோசனையை அரசு பரிசீலிக்கவில்லை என்று தெரிவித்திருப்பது இப்பகுதி மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நெடுவாசல் பகுதியில் அமைக்க உத்தேகித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களின் எழுச்சிமிக்க போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டிவரும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x