

கடலூரில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி வந்த 5 பேரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். ரூ.4 கோடி மதிப்புள்ள சிலை பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வாடகைக் கார்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை 2 கார்கள் வந்து நின்றன. அதில் இருந்து 5 பேர் இறங்கி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 20-க்கும் மேற் பட்ட போலீஸார் அவர்களை சுற்றிவளைத்து துப்பாக்கியைக் காட்டி பிடித்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார். போலீஸார் அவரை கடலூர் அரசு மருத்துவ மனை அருகே மடக்கிப் பிடித்தனர்.
அந்த 5 பேரும் வந்த காரை போலீஸார் சோதனை செய்ததில், ஒரு சூட்கேஸில் துணிகளுக்கு கீழே சாக்குப் பையில் ஒன்றரை அடி உயரம் உள்ள ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை இருந்தது. போலீஸார் சிலையை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் புதுச்சேரி அரியங்குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகரன்(44), கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த முகுந்தன் சர்மா(30), நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த வினோத்(31), செந்தில்(29), மயிலாடுதுறை அருகே உள்ள மணஞ்சநல்லூரைச் சேர்ந்த ராஜா(25) என்று தெரியவந்தது.
இந்த கும்பலின் தலைவனாக ராஜா இருந்துள்ளார். இவர்கள் மயிலாடுதுறையில் இருந்து சிலையை கடலூருக்கு எடுத்து வந்து கைமாற்றி விடும்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறியதாவது:
கடலூர் எஸ்பி விஜயகுமார் கொடுத்த தகவலின் அடிப்படை யில்தான் இந்த சிலை கடத்தல் காரர்களை பிடிக்க முடிந்தது. இந்த சிலை 1,600 ஆண்டுகள் பழமை யானது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிலை. இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப் புள்ள நமது சிலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. புதுச்சேரியை மையமாகக்கொண்டு இந்த சிலை கடத்தல் நடைபெறுகிறது என்றார்.