

திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கோவை உக்கடம் அருகேயுள்ள பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் (31). திராவிடர் விடுதலைக் கழக பிரமுகரான இவர், பழைய இரும்பு வியாபாரம் செய்தார். கடந்த 16-ம் தேதி இவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போத்தனூர் ராம் நகரைச் சேர்ந்த அன்ஷாத் (30), கரும்புக்கடை சதாம்உசேன் (27), போத்தனூர் சம்சுதீன் (27) ஆகியோர் கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.5-ல் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கடைவீதி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சரணடைந்த 3 பேரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். பின்னர் 3 பேரையும் 24-ம் தேதி (இன்று) மாலை 5 மணி வரை போலீஸார் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, 3 பேரையும் கடைவீதி போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.