Published : 12 Jan 2016 06:12 PM
Last Updated : 12 Jan 2016 06:12 PM

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், ''நான் கடந்த டிசம்பர் 22-ம் தேதி, தமிழகத்தல் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் கோரியிருந்தேன்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கடந்த 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் ஏற்பாடுகளை செய்யும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிவிப்புக்கு இன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அந்த அறிவிப்பு அடிப்படையில் ஜல்லிக்கட்டை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது அவசியம். எனவே, இப்பிரச்சினையின் அவசரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழக மக்கள் சார்பாக இந்த விவகாரத்தில் தங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x