Published : 20 Jul 2016 03:01 PM
Last Updated : 20 Jul 2016 03:01 PM

திருவள்ளுவர் சிலை சர்ச்சை: உத்தராகண்ட் அரசுக்கு அறிவுறுத்த மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ உத்தராகண்ட் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, ''உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் தமிழக மாமுனிவர் திருவள்ளுவரின் சிலையை நிறுவ எழுந்துள்ள எதிர்பாராத சர்ச்சையில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என கோருகிறேன். மாநிலங்களவை எம்பியான தருண் விஜய், ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவெடுத்து அதற்காக நிதியும் சேகரித்தார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும்.

இதற்கான திருவள்ளுவர் கங்கை பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த மாதம் 18-ம் தேதி, மாநிலங்களவை எம்பி தருண் விஜய் மறறும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் கங்கை பயணம் சென்னை வந்ததும், இங்கிருந்து 22-ம் தேதி ஆளுநர் கே.ரோசய்யா பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும் எம்பிக்கள் மற்றும் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் கூறிய சமத்துவம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான செய்தியை வட இந்தியாவில் உள்ள மக்களும் அறியச் செய்வதே இந்த திருவள்ளுவர் கங்கை பயணத்தின் நோக்கமாகும்.

உத்தரகண்ட் மாநிலம் ஹர் கி பவுரியில் நிறுவ வேண்டிய திருவள்ளுவர் சிலை, அங்குள்ளவர்களின் போராட்டம் காரணமாக, ஹரித்வாரின் சங்கராச்சார்யா சவுக் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி நிறுவப்பட்டது. தொடர்ந்து, 29-ம் தேதி அம்மாநில ஆளுநர் மற்றும் முதல்வரால் திறக்கப்பட்டது.

அதன் பின்னரும் உள்ளூரில் நடந்த தொடர் போராட்டங்களால், சிலை எடுக்கப்பட்டது. மீண்டும் அந்த சிலை ஹரித்வாரில் உள்ள தேம் கோதி விருந்தினர் மாளிகை பகுதியில், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா ஆளுநர்கள் மற்றும் இதர தலைவர்களால் தற்காலிகமாக நிறுவி திறக்கப்பட்டது.

தற்போது திருவள்ளுவர் சிலை, ஹரித்வாரில் உள்ள தேம் கோதி விருந்தினர் மாளிகை பகுதியில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிகிறேன். திருவள்ளுவர் சிலை தொடர்பாக வெளியாகும் தொலைக்காட்சிகளின் வெளியாகும் செய்திப்படங்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உத்தராகண்ட் அரசுடன் பேசி, திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை அறிப்பதுடன், விரைவாக உரிய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலம் தாழ்த்தப்படுமேயானால், வட இந்தியாவில் புனித தலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவும் திட்டத்தின் நோக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிடும்.

எனவே, இந்த விஷயத்துக்கு தாங்கள் முன்னுரிமை அளித்து, உத்தராகண்ட் அரசுடன் பேசி இந்த விஷயத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்'' என்று முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x