Published : 09 Mar 2014 07:57 AM
Last Updated : 09 Mar 2014 07:57 AM

பெயர் சேர்க்க விண்ணப்பித்தால் 2 வாரத்தில் பூத் சிலிப்: பிரவீன் குமார் தகவல்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர் அனைவருக்கும் 2 வாரத்தில் பூத் சிலிப் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 60,418 வாக்குச்சாவடிகளில் நாளை (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் தெரிந்து கொள்ள வசதியாக வாக்காளர் பட்டியல் அங்கு ஒட்டப்பட்டு இருக்கும்.

பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், வாக்காளர் அடையாள அட்டை இருந்து, பட்டியலில் பெயர்விடுபட்டு போனவர்கள் சிறப்பு முகாமில் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பித்துவிடலாம்.

வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது, ஒரு போட்டோ, இருப்பிட முகவரிக்கான ஆவணம், 25 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் பிறந்த தேதிக்கான ஆவணம் ஆகியவற்றை கொண்டுபோக வேண்டும். அடையாள அட்டை முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து அதற்கான ஒப்புகை சீட்டும் பெற்று பெயர் இடம்பெறாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து விடுவது நல்லது.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்பு விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அடையாள அட்டை வாங்காதவர்கள் இந்த சிறப்பு முகாமில் அதை வாங்கிக்கொள்ளலாம். நாளை நடக்கும் சிறப்பு முகாமில் மட்டுமின்றி மார்ச் 25-ம் தேதி வரை வழக்கம்போல் மண்டல அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் படிவத்தை பூர்த்தி செய்துகொடுக்கலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

2 வாரத்தில் பூத் சிலிப்...

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களின் படிவங்கள் ஆய்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு 12 அல்லது 13 நாட்களில் பூத் சிலிப் வழங்கப்படும். இந்த பூத் சிலிப்பை பயன்படுத்தியே புதிய வாக்காளர்கள் ஓட்டுபோடலாம். குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்படும்.

37 லட்சம் ரொக்கம் பறிமுதல்...

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையிலான விளம்பர பதாகைகள், பலகைகளை (ஹோர்டிங்) அப்புறப்படுத்த 3 நாள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் நடந்துகொண்டிருக்கிறது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் அதிக மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்த வகையில், வியாழக்கிழமை நிலவரப்படி, நீலகிரி மாவட்டத்தில் ரூ.22 லட்சத்து 59 ஆயிரமும், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14லட்சத்து 50 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை கண்காணிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும் படையினரும், நிரந்தர படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையில் மாஜிஸ்திரேட் அதிகாரம் பெற்ற அதிகாரி, போலீஸ் அதிகாரி, ஒரு வீடியோ கிராபர், ஆயுதம் தாங்கிய 3 போலீஸார் ஆகியோர் பணியில் இருப்பார்கள். அதேபோல், நிலையான நிரந்தர படையில் மாஜிஸ்திரேட் அதிகாரம் பெற்ற அதிகாரி, 3 போலீஸார், ஒரு வீடியோகிராபர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பறக்கும் படையினர் ஆய்வில் ஈடுபடுவதுடன் பறிமுதல் செய்யும் அதிகாரமும் பெற்றிருப்பர்.

இரட்டை இலை சின்னம்...

எம்.ஜி.ஆர். சமாதி மற்றும் அரசு சிறிய பஸ்களில் இரட்டை இலை சின்னம், ‘அம்மா’ என்ற பெயர், போலீஸ் டி.ஜி.பி. இடமாற்றம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம். இன்னும் பதில் வரவில்லை. மற்றபடி, தமிழக அரசு விற்பனை செய்யும் குடிநீர் பாட்டில்களிலும் அம்மா உணவகத்திலும் முதல்வர் படத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கலுக்கு முன்பு செய்யப்படும் தேர்தல் பிரச்சார செலவுகள், சம்பந்தப்பட்ட கட்சியின் செலவு கணக்கில் வரும். அதற்கு உச்சவரம்பு இல்லை என்றாலும் அதுதொடர்பான கணக்கு களை 90 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளர்களை ஈடுபடுத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான பயணச் செலவு தேர்தல் செலவின் கீழ் வராது. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார். பேட்டியின்போது இணை தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் உடனிருந்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விவரங்களை சரிபார்க்க எஸ்.எம்.எஸ்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வாக்காளர் அடையாளர் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களில் தவறுகள் ஏற்படுவதாக பலவேறு தரப்பினரும் புகார் தெரிவிக் கிறார்கள். இதை சரிசெய்யும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து ஆய்வு முடிந்ததும் வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெறும் வாக்காளர் பெயர், முகவரி, பிறந்த தேதி முதலான விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

அந்த விவரங்களில் தவறுகள் இருப்பின் அவற்றை சரிசெய்து கொள்ள லாம். இதனால், வாக்காளர் அட்டையில் எவ்வித தவறும் இடம்பெறாது. இந்த புதிய திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x