காஷ்மீர் பனிச்சரிவில் மரணமடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ்

காஷ்மீர் பனிச்சரிவில் மரணமடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ்
Updated on
1 min read

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநிலம், பந்திபுர் - குரேஷ் பள்ளத்தாக்கில் 26.1.2017 அன்று ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிழக்கு கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த, சிப்பாய் இளவரசன் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், பல்லக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிப்பாய் சுந்தரபாண்டி ஆகிய இருவரும் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் இளவரசன் மற்றும் சுந்தரபாண்டி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என 2.9.2016 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதனடிப்படையில் இறந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in