Last Updated : 10 Dec, 2013 12:00 AM

 

Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM

மதுரை: வாழ வழியற்ற நிலையில் தவிக்கும் மனவளர்ச்சி குன்றிய அண்ணன், தங்கை

மனவளர்ச்சி குன்றிய அண்ணன், தங்கை இருவரும் பெற்றோரையும் இழந்த நிலையில் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.

மதுரை கரும்பாலை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருக்கு செய்யது அலி பாத்திமா, சுல்தான் அலாவுதீன் (32), கதீஜாபானு (27) என 3 குழந்தைகள். மூன்று பேருமே உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

இந்த நிலையில், கதீஜாபானுவும், சுல்தான் அலாவுதீனும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு உதவியாக தாய்மாமா சேக் மதார் வந்திருந்தார்.

அவரிடம் கேட்டபோது அவர் கூறியது:

என் உடன்பிறந்த தங்கை மைதீன் பாத்திமாவுக்கு இதேபோல பெரிய கண்கள் இருந்தன. மற்றபடி மனவளர்ச்சி எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அவரை முகமது இஸ்மாயில் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தோம். பிறந்த 3 குழந்தைகளும் என் தங்கையைப் போலவே பிதுங்கி இருப்பது போன்ற பெரிய கண்களுடன் பிறந்தனர்.

கடைசி குழந்தையான சுல்தான் அலாவுதீனுக்கு பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. எனவே, 3 பேருக்குமே திருமணம் செய்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. என்னைப்போல டிரைசைக்கிள் ஓட்டுகிறவர்களிடம்கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருமே திருமணம் செய்ய முன்வரவில்லை. இந்த துக்கத்திலேயே என் மைத்துனர் முகமது இஸ்மாயில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன் என் தங்கையும் இறந்துவிட்டார். இதனால் 3 குழந்தைகளும் ஆதரவற்றவர்கள் ஆகிவிட்டனர்.

மூத்த குழந்தையான செய்யது அலி பாத்திமாதான் இந்த இருவரையும் தாயைப்போல பார்த்து வந்தார். அவர் வீட்டை நிர்வாகம் செய்ய, கதீஜாபானு கே.கே.நகரில் உள்ள ஒரு சேட் வீட்டில் வீட்டு வேலைக்குச் சேர்ந்தார். இந்தக் கொடுமைக்கு நடுவே, கடந்த 30 நாள்களுக்கு முன்பு செய்யது அலி பாத்திமாவும் இறந்துவிட்டார்.

இவர்கள் இருவரும் பார்க்கத்தான் பெரியவர்கள். ஆனால் மனதளவில் குழந்தைகள். இத்தனை நாளும் அம்மா, அக்காவின் பராமரிப்பில் வாடகை வீட்டில் இருந்தார்கள். இனிமேல், இவர்களை என்ன செய்வதென்றே தெரியாமல், இளையவன் சுல்தான் அலாவுதீனை சுந்தரராஜன்பட்டியில் உள்ள பார்வையற்றோர் விடுதியில் சேர்த்தோம்.

அங்கு இவன் பார்வையற்றவன் என்பதற்கான ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வரச் சொன்னார்கள். அதனால்தான் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளேன். நான் ஒரு டிரைசைக்கிள் தொழிலாளி.

இவர்களைக் காப்பாற்றும் அளவுக்கு எனக்கு அல்லா சக்தியைத் தரவில்லை. மூத்த குழந்தையின் 40 நாள் காரியம் முடிந்த பிறகு, கதீஜாபானுவை சேட் வீட்டிலேயே தங்க வைத்துவிடலாம் என்றிருக்கிறேன்” என்றார்.

“இந்த இருவருக்கும் ஊனமுற்றோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தீர்களா? என்று கேட்டபோது, அப்படியொரு திட்டம் இருப்பதே தங்களுக்குத் தெரியாது என்றார் சேக் மதார். இவரது செல்பேசி நம்பர் 93603 89421. கருணை உள்ள அதிகாரிகளும், தொண்டுள்ளம் கண்ட பொதுமக்களும் இவர்கள் உதவித் தொகை பெறவும், பிற வசதிகள் பெறவும் உதவலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x