

உதகை அருகே மனிதர்களை கொன்ற விலங்கு, தொட்டபெட்டா காப்புக் காட்டை ஒட்டியுள்ள தூனேரி கிராமத்தில், மாட்டைக் கொல்ல செவ்வாய்க்கிழமை இரவு முயற்சி செய்துள்ளது. பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வடக்கு வனக்கோட்டம், வடக்கு சரகத்துக்கு உட்பட்ட சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா, வன விலங்கு தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில், தொட்டபெட்டா காப்புக் காட்டை ஒட்டியுள்ள மற்றோரு கிராமமான சின்கோனா அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன்(54) கொல்லப்பட்டார்.
தொட்டபெட்டா வனப்பகுதியில் மனிதர்களை கொன்ற விலங்கு சிறுத்தையா? புலியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனித வேட்டையாடி வரும் விலங்கைப் பிடிக்க, வடக்கு வனக்கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் பிரேம்குமார், சரகர்கள் பெரியசாமி, சரவண குமார், சுந்தராஜ் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக் களில் தலா 10 வன ஊழியர்கள் துப்பாக்கிகளுடன் 24 மணி நேரமும், கண்காணிப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
5 கூண்டு
விலங்கைப் பிடிக்க, சோலாடா முதல் சின்கோனா வரையிலான தொட்டபெட்டா காப்புகாட்டை ஒட்டி 5 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விலங்கை கண்காணிக்க காமிராக்கள் பொருத்தியுள்ளனர். விலங்கை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. கால்நடை மருத்துவர்கள் மனோகரன், விஜயராகவன் தொட்டபெட்டாவுக்கு வர வழைக்கப்பட்டுள்ளனர். வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், இரவு நேரம் நடமாடக் கூடாது, பகல் நேரங்களில் தனியாகச் செல்லாமல் குழுவாகச் செல்லவும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
தப்பியது
தொட்டபெட்டா காப்பு காட்டை ஒட்டியுள்ள மற்றொரு கிராமமான தூனேரில் செவ்வாய்க்கிழமை இரவு மாடு தொழுவத்தில் புகுந்த விலங்கு, மாட்டை கொல்ல முயற்சித்துள்ளது. கன்றுக்குட்டியின் காலை கடித்த நிலையில், மாடு சப்தமிட, ஆட்கள் வந்ததும், விலங்கு தப்பி ஓடிவிட்டது. சம்பவ இடத்தை தமிழக வனத்துறை முதன்மை வனப்பாது காவலர் லட்சுமிநாராணயன், கோவை மண்டல வனப்பாது காவலர் வி.டி.கந்தசாமி ஆய்வு செய்தனர்.
எச்சரிக்கை
தமிழக முதன்மை வனப்பாது காவலர் லட்சுமிநாராயணன் கூறுகையில், இறந்த இருவரையும் ஒரே விலங்கு தாக்கியிருக்கலாம். தாக்கிய விலங்கு சிறுத்தையா? அல்லது புலியா? என்ற சந்தேகம் உள்ளது. அந்த விலங்கு வயோதிக காரணத்திலோ, நோய் பாதிப்பு காரணத்திலோ வேட்டையாட முடியாத நிலையில், மனிதர்களை கொன்றிருக்கலாம். விலங்கைப் பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக கூண்டுகள் வைக்கப்படும். வனத்துறையில், ஊழியர் பற்றாக்குறை உள்ளது. பணியாளர்களை நியமிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இயற்கை உபாதை கள் மற்றும் விறகு சேகரிக்க, வனத்தினுள் செல்ல வேண்டாம் என்றார். வன விலங்கு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதால் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா சிகரத்துக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல காவல்துறை யினர் தடை விதித்துள்ளனர்.