

முல்லை பெரியாறு பகுதியில் பேபி அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என மத்திய வனத்துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் நடந்த விவாதம் தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, கோவையைச் சேர்ந்த அதிமுக மாநிலங்களவை எம்பியான ஏ.கே.செல்வராஜ், ‘‘ முல்லை பெரியாறு அணையில் உள்ள சிறிய அணைக்கு அருகில் உள்ள மரங்களை வெட்ட, தமிழக அரசு வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அனுமதியை பெற்றதா? அனுமதியை பெற்றி ருந்தால் அதன் விவரங்கள், அனுமதி வழங்கப்படவில்லை என்றால் தாமதத்துக்கான காரணம் என்ன?’’ என கேட்டார். இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இணை அமைச்சர் அனில் மாதவ் தவே, ‘முல்லை பெரியாறில் உள்ள பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி அல்லது வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான கோரிக்கை எதுவும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை’ என்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.