

மாணவரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு ஐடிஐ மாணவர்கள் நேற்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு ஐடிஐ மாணவர்கள் சுமார் 25 பேர் நேற்று 2-வது மாதிரித் தேர்வை புறக்கணித்துவிட்டு, ஆட் சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால், சார் ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜை சந்தித்து அவர்கள் அளித்த மனு விவரம்:
கடந்த 8-ம் தேதி வெள்ளிக் கிழமை மாலை வகுப்புகள் முடிந்ததும், வீடுகளுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தோம். அப்போது அந்த வழியாக போலீஸாரின் ரோந்து வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் இருந்த போலீஸார், விசாரணை எனக் கூறி எங்களுடன் நின்ற ஒரு மாணவரை தகாத வார்த்தையில் பேசி தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். அந்த போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் மக்கள்
காயல்பட்டினம் பப்பரபுளி மயான பகுதி பாதுகாப்பு குழுவை சேர்ந்த மக்கள் சார் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
பப்பரபுளி மயான பகுதியில் காயல்பட்டினம் நகராட்சி மூலம் கழிவு பொருட்கள் கொட்டப் படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இறுதிச்சடங்குகள் நடத்த முடியவில்லை. எனவே, அந்த பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நண்டு ஆலை பிரச்சினை
வேம்பார் ஊராட்சி சிலுவைபுரம் கிராம மக்கள், சார் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் இயங்கி வரும் நண்டு பதப்படுத்தும் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன் அந்த ஆலை மூடப்பட்டது. தற்போது எந்தவித அனுமதியும் பெறாமல் கடந்த 6-ம் தேதி முதல் அந்த ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக மனு
மதிமுகவினர் அளித்த மனு:
நகர மற்றும் கிராமப்புறங்களில் இயங்கும் மினி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை யும், அனுமதி அளிக்காத வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்குவதையும் உடனே தடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழக அரசின் சிற்றுந்து கட் டண ஆணையின் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும். அதுபோல், சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். தியேட்டர்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடியங்குளம் ஊராட்சி
ஓட்டப்பிடாரம் வட்டம், கொடி யங்குளம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 100 பெண்கள் திரண்டு வந்து அளித்த மனு விவரம்:
கொடியங்குளம் ஊராட்சியில் சுமார் 200 பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் விரைவில் வந்துவிடும் என்று மட்டும் கூறுகின்றனர். ஆனால், இதுவரை வரவில்லை. எனவே, ஊதியம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.