

தேர்தலில் போட்டியிடவில்லை என்ற வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. வைகோ தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கூறியதாவது:
"சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவர் வைகோ. சாதி மோதல் தவிர்க்கும் வகையில் போட்டியிடப் போவதில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
எதிர்க் கட்சியைச் சார்ந்த நான்கு அல்லது ஐந்து பேர் வைகோவுக்கு எதிராக கருத்து சொல்வதால் அது சமூகம் சொல்கிற கருத்தாக முடியாது. அதனால் ஆற்றல் மிக்க தலைவர் வைகோ தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும். சட்டப் பேரவைக்கு வைகோ செல்லவேண்டும்.
முதல்வர் ஆக வாய்ப்பு இல்லாததால்தான் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறுவது அபத்தமானது. அவதூறானது.
எதிர்க் கட்சிகள் வைகோவுக்கு எதிராக அவதூறு பரப்பி, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாளுக்கு நாள் மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது'' என்று திருமாவளவன் கூறினார்.