

திருநங்கை ஒருவரை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக கூறி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 2 திருநங்கைகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாரிகாபானு(21). திரு நங்கையான இவர், பெற்றோர் தம்மை ஏற்றுக் கொள்ளாததால் ஓராண்டுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்தார். அம்பத்தூர் பிரித்திவிவாக்கம் மெயின் ரோட்டில், மற்றொரு திருநங்கையான பானுவின் பாதுகாப்பில் வசித்து வருகிறார்.
2013-14ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றில் பிளஸ் 1 படித்து முடித்த கையோடு திருவள்ளூர் மாவட்டம் வந்த தாரிகாபானு, தாம் விட்ட பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர விரும் பினார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று, தன்னை பிளஸ் 2 வகுப்பில் சேர்க்குமாறு கோரியுள்ளார். எனினும், ‘நீங்கள் விரும்பும் பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் தமிழ் மீடியம் இல்லை’ என்று சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகங்கள் தெரிவித்துவிட்டதாக தாரிகாபானுவும், பானுவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் தம்மை சேர்க்கக் கோரி பள்ளிக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அலைந்தும் பலனில்லை என்று தாரிகாபானு குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாதுகாவலர் பானுவுடன் இணைந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலெட்சுமி ஆய்வுக் காக திருவொற்றியூர் சென்றதால் அலுவலகம் திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உதவியாளர்கள், தாரிகாபானுவை பள்ளி யில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி, அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தும் கடிதம் ஒன்றை தயாரித்து அவரிடம் அளித்தனர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற திருநங்கைகளின் தர்ணா முடிவுக்கு வந்தது.