Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

உதகை: வானரங்களுக்கு தயாராகிறது ஒரு காப்பகம்

ஆதரவற்றோர், முதியோர், குழந்தைகள், உடல் ஊனமுற்றோருக்கு நாட்டின் பல பகுதிகளில் காப்பகங்கள் உள்ளன. இவை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இந் நிலையில், வாய் பேச முடியாத ஐந்தறிவு ஜீவனான வானரங்களுக்கு ஒரு காப்பகம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தயாராகி வருகிறது என்பது புது செய்தி.

நீலகிரி மாவட்டம், வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி குன்னூர்-பர்லியாறு மலைப்பாதை. இந்த சாலை அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்வதால் வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பது சர்வசாதாரண நிகழ்வு. சாலையில் வானரங்கள் கூட்டம் அதிக அளவு காணப்படும். மனிதர்களைப் பார்த்தவுடன் இவை குஷியாகிவிடும். இவற்றைக் காணும் சுற்றுலாப்பயணிகளும் அவைகளுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

குன்னூர்-பர்லியாறு சாலையில் இரு பக்கமும் உள்ள வனப் பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உணவுப் பொருட்களை அங்கு அமர்ந்து உண்கின்றனர். பின்பு, உணவுக் கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் இப் பகுதியிலேயே வீசிவிட்டுச் செல்கின்றனர். கழிவுகளை குரங்குகள் உண்பதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

மேலும், சில சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களிலிருந்து உணவை தூக்கி எறிவதால் அவற்றை உண்ண சாலைக்கு வரும் விலங்குகள் எதிரே வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் பரிதாப நிலையும் உள்ளது.

இதனால், குன்னூர்-பர்லியாறு, கூடலூர்-கக்கநல்லா, உதகை-கூடலூர் சாலைகளில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்து, அந்த சாலையில் அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனர். இந் நிலையில், வாகனங்களில் அடிப்பட்டு பல குரங்குகள் ஊனமாகியுள்ளன. இவை இந்த மலைப் பாதையில் வலம் வருவது பார்ப்பவர்களை பரிதாப்பட வைக்கிறது.

வனங்களில் அருகேயுள்ள குடியிருப்புகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இவற்றைப் பிடிக்கும் வனத்துறையினர், அவற்றை வனங்களில் விடுவிக்கின்றனர். இருப்பினும் குரங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் ஆத்திரமடையும் சிலர், குரங்குகளை தாக்க முற்படுகின்றனர்.

இதன் காரணமாகவும் குரங்குகள் ஊனமாகின்றன. குடியிருப்புகளில் பிடிக்கப்படும் குரங்குகள் வனத்தில் விடப்பட்டாலும், மீண்டும் அவை குடியிருப்புகளையே தேடி வருகின்றன. குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், காயமடையும் குரங்குகளுக்கு சிகிச்சை அளிக்கவும் குன்னூரில் குரங்குகள் காப்பகத்தை உருவாக்கி வருகிறது வனத்துறை.

குன்னூர் வட்டப்பாறை பகுதியில் சுமார் 1200 சதுர அடி பரப்பளவில் ரூ.12 லட்சம் செலவில் வாகனரங்களின் காப்பகத்தை அமைக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் சிவா கூறுகையில், ‘வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் குரங்குகள் காயங்களுடனும், கை கால் இழந்து ஊனமாகியும் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாகத் திரிகின்றன.

காப்பகம் அமைக்கப்படுவதால், காயமுற்ற குரங்குகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதற்காக மருந்தகசாலை (டிஸ்பென்ஷரி) அமைக்கப்படுகிறது. பெருகி வரும் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு இந்த மருந்தகசாலையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்படும். கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு மையத்தினர் இதில் ஈடுபடுத்தப்படுவர்,’ என்றார். குரங்குகளுக்கும் வாழ்வளிக்கும் இந்த நற்பணியை மக்கள் வெகுவாக வரவேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x