கணக்கு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தமிழக அரசின் தவறுகள், இழப்புகள்: கருணாநிதி பட்டியல்

கணக்கு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தமிழக அரசின் தவறுகள், இழப்புகள்: கருணாநிதி பட்டியல்
Updated on
2 min read

இந்திய கணக்குத் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக அரசின் தவறுகள், இழப்புகளை திமுக தலைவர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய இந்திய கணக்கு தணிக்கை துறைத் தலைவரின் அறிக்கை கடந்த 2-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திட்டமிட்டு செயல்படாததால் அரசுக்கு ஏற்பட்ட பல ஆயிரம் கோடி இழப்புகள், திட்டங்கள் முடங்கியதால் பலநூறு கோடி நிதி வீணடிக்கப்பட்ட விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில விவரங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

2011 -12, 2012-13-ம் ஆண்டுகளில் வருவாய் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது. 2014-15-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 6 ஆயிரத்து 408 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது மாநிலத்தின் வரிவருவாய் 2014-15-ல் 10 சதவீதம் அதாவது ரூ. 992 கோடி குறைந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப்படவில்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 100 கோடி, கூவம் நதியை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடி, மோனோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 200 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1,216 கோடி, நகராட்சிகளுக்கு மானியமாக ஒதுக்கப்பட்ட ரூ. 291 கோடி, மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு மானியமாக ஒதுக்கப்பட்ட ரூ. 200 கோடி தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு மானியமாக ஒதுக்கப்பட்ட ரூ. 177 கோடி, விலையில்லா பொருள்கள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 738 கோடி மற்றும் ரூ. 100 கோடி ஆகியவை காரணங்கள் இல்லாமல் ஒப்புவிக்கப்பட்டுள்ளன.

நிதி தாமதமாக விடுவிக்கப்பட்டதால் கல்வியாண்டு முடிந்த பிறகே மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மடிக்கணினி வழங்குவதன் நோக்கத்தையே இது சிதைத்துவிட்டது.

2013-14-ம் ஆண்டில் ரூ. 1,440 கோடிக்கு 5 மின் திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்ட போதிலும் டிசம்பர் 2015 வரை அந்தப் பணிகள் முடிக்கப்படவில்லை. மின் தொகுப்பு இடர்ப்பாடுகளை காரணமாகக் கூறி குறைந்த விலையிலான காற்றாலை மின்சார உற்பத்தியை நிறுத்தியது நியாயமற்றது. குறுகிய கால மின் கொள்முதல் விலைக்கும் (யூனிட்டுக்கு ரூ. 5.50), அதிகபட்ச காற்றாலை மின் கொள்முதல் விலைக்கும் (யூனிட்டுக்கு ரூ. 3.51) உள்ள வித்தியாசத்தை கணக்கில் கொள்ளும்போது ரூ. 159 கோடி அளவுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகிவற்றை வெளிசந்தையில் வாங்கியதால் 2014 அக்டோபர் முதல் 2015 மார்ச் வரை ரூ. 2 கோடியே 78 லட்சம் தவிர்க்கக் கூடிய செலவு ஏற்பட்டது. கடைசியாக இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ. 65 ஆயிரத்து 725 கோடி என கணக்கு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் செயல்பாட்டு தரம், தவறுகள், முறைகேடுகள் ஆகியவற்றுக்கு சான்றாக இந்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை அமைந்துள்ளது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in