

தொண்டையில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக சமக தலைவர் சரத்குமார், தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். அடுத்த 5 நாட்களுக்கு அவர் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக, கடந்த26-ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பல்வேறு இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்துவந்தார். வெள்ளிக்கிழமை காலையில் அவர் தென்சென்னை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால், காலையில் இருந்தே, சரத்குமாருக்கு தொண்டையில் நோய் தொற்று இருந்ததால், தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக சமக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘எங்கள் கட்சி தலைவருக்கு தொண்டையில் ஏற்பட்ட நோய் தொற்று சரியாகவில்லை. இதனால் அவர், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அடுத்த 5 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடரும்’’ என்றனர்.