காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் வேண்டுகோள்

காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட்  வேண்டுகோள்
Updated on
1 min read

காவிரி பிரச்சினைக்கு பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலம் தமிழக - கர்நாடக அரசுகள் தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் பிறகு கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் வரும் 20-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு என்பது தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நீண்ட கால பிரச்சினையாகும். தண்ணீரை எவ்வாறு பங்கிடுவது என்பது பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இரு மாநில மக்களும் மோதிக் கொள்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

எனவே, காவிரி நதி நர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற முடிவை ஏற்று இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். மேலும் இரு மாநில மக்களுக்கும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய மற்றும் தமிழக - கர்நாடக அரசுகள நதி நீர் பங்கீடு தொடர்பாக பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in