

அலங்காநல்லூரில் நேற்று 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 5 பெண்கள், ஒரு இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக மதுரை வந்தார். ஆனால், அலங்காநல்லூர் மக்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்து முதல்வர் வந்தால் அவர் மட்டும்தான், ஜல்லிக்கட்டு பார்ப்பார், ஊர் மக்கள் புறக்கணிப்போம் என்றனர். இதைத் தொடர்ந்து, மக்கள் விருப்பமில்லாமல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம், அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவித்துவிட்டு முதல்வர் சென்னை சென்றார்.
இந்நிலையில் நேற்று 8-வது நாளாக அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் உள்ளூர் மக்களும், மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தை தொடங்கினர். குடியரசு தினம் வரும் 26-ம் தேதி வருவதால் அன்றும் இதேபோல் போராட்டம் தொடர்ந்தால் சிக்கல் ஏற்படும் என்பதால் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதனால், நேற்று காலை முதலே சென்னை மெரீனா பீச், கோவை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற நகரங்களில் போலீஸார் தடியடி, சுமுக பேச்சவார்த்தையால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துகொண்டிருந்தனர். ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மையப்புள்ளியாக இருக்கும் அலங்காநல்லூரில் போராட்டத்தை போலீஸாரால் முடிவுக்கு கொண்டு வர முடியாததால் தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
அதனால், நேற்று பகல்12 மணியளவில் அலங்காநல்லூரில் அதிரடியாக போலீஸார் 1000-க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டனர். அவர்கள், ஒரு புறம் தடியடி நடத்துவதற்காக தயாராக இருந்த நிலையில் மற்றொருபுறம் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி போராட்டக்காரர்களிடம் சமாதானப் பேச்சை மேற்கொண்டார். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அடுத்தகட்டமாக போலீஸார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழு உறுப்பினர்களையும், ஊர் முக்கியஸ்தர்களையும் அழைத்து போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். அவர்கள், போலீஸாரின் வேண்டுகோளை ஏற்றி, போராட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்து அவர்கள் ஊர் கமிட்டி கூட்டத்தை வாடிவாசல் அருகே காளியம்மன் கோயில் முன் கூட்டினர்.
அதில் அலங்காநல்லூரில் பிப்.1-ல் ஜல்லிக்கட்டு நடத்த முடிவெடுத்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போராட்டத்தை கைவிடுங்கள், கலைந்து செல்லலாம் என்றனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரின் மற்றொரு தரப்பினரும், போராட்டக்காரர்களும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அதனால், இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், ஊர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும், ஊர் முக்கியஸ்தர்கள், போலீஸாரிடம் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம், போராட்டத்தில் ஈடுபடுவோரை நீங்கள் வெளியேற்றலாம் என்றனர்.
இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள், கடைசி முயற்சியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 10 நிமிடங்கள் உங்களுக்கு கால அவகாசம் தருகிறோம், கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீஸாரிடம் இருந்து போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களை காப்பாற்ற, அவர்களை சுற்றிலும் உள்ளூர் பெண்கள் மனிதச்சங்கிலி ஏற்படுத்தி பாதுகாப்பாக நின்றனர். அதனால், போலீஸார் தடியடி நடத்த சற்று தயக்கம் காட்டினர்.
தொடர்ந்து போராட்டத்தின் தீவிரம் அதிகமாகவே பெண் போலீஸாரை கொண்டு சுற்றி நின்றி உள்ளூர் பெண்களை அப்புறப்படுத்தினர். பதற்றம் அதிகரித்ததால் தயாராக இருந்த சிறப்பு அதிரடிப்படை போலீஸார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். இதில் உள்ளூர் பெண்கள், மாணவிகள், மாணவர்களும் சிக்கினர். இளைஞர்கள் அவர்கள் மீது கற்களை வீச ஆரம்பித்தனர்.
போலீஸார் ஒருபுறம் தடியடி நடத்துவதும், மற்றொருபுறம் இளைஞர்கள் கற்கள், கட்டைகளை எடுத்து போலீஸார் மீது வீசுவதுமாக இருந்தது. போலீஸார் பெண்கள், ஆண்களை எல்லோரையும் விரட்டி தாக்க ஆரம்பித்தனர். அப்படியிருந்தும் போராட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை விட்டு நகராமல் போலீஸார் அடிக்காமல் இருக்க தங்கள் மேல் தேசிய கொடி வர்ணம் பூசப்பட்ட துண்டை போர்த்திக் கொண்டு தேசிய கீதம் பாட ஆரம்பித்தனார். சிலர் வந்தே மாதரம் என்றும் கோஷமிட்டனர்.
ஆனாலும் போலீஸார் அவர்களை தடியடி நடத்தியும், குண்டு கட்டாக தூக்கியும் கைது செய்தனர். இதில் 5 பெண்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். 5 போலீஸ் வாகனங்கள், ஒரு தனியார் தொலைக்காட்சி வாகனம், 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. 2 பெண்களின் தலையில் ரத்தம் கொட்டியது. 5 பெண்கள், 10 இளைஞர்கள் கால்களில் காயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து கற்களை வீசிய இளைஞர்களை போலீஸார் ஊருக்குள் சந்துகளில் விரட்டிச் சென்றனர். அவர்கள் நாலாபுறம் சிதறி ஓடினர். தடியடியால் அங்கு அசாதாரண நிலை ஏற்பட்டதால் ஊர் மக்கள், வீடுகளை பூட்டிக்கொண்டு வெளியே வரவில்லை. பலர், ஆங்காங்கே கட்டிட சந்துகளிலும், மாடுகளிலும், மரங்கள் மேலேயும் ஏறி போலீஸாரிடம் இருந்து தப்பினர். போலீஸார், வீடு வீடாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர்.
இதற்கு உள்ளூர் மக்கள் ஒரு தரப்பினரும், பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸார் அவர்கள் மீதும் தடியடி நடத்தியதால் அவர்கள் வாடிவாசலுக்கு சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக மதுரையில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களை அப்புறப்படுத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு ஓரளவு அலங்காநல்லூர் ஊர் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பதற்றத்தை தணிக்கவும், வெளியூர்காரர்கள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கவும், போலீஸார் ஊருக்குள் கொடி அணிவகுப்பு நடத்தினர். அலங்காநல்லூர் ஊருக்கு வரும் சாலைகளில் நேற்று மாலை வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆங்காங்கே தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஊருக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் அலங்காநல்லூர் ஊர் வந்திருந்தாலும் இன்னமும் அங்கு பதற்றம் குறையவில்லை. சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அலங்காநல்லூர் வெறிச்சோடி காணப்படுகிறது.
‘நிலைமை கட்டுக்குள் உள்ளது’
எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறுகையில், அலங்காநல்லூரில் முழு அமைதி நிலவுகிறது. போராட்டக் குழுவுக்கு போராட்டத்தை வாபஸ் பெற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், சட்டத்தை மீறி அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், குறைந்தபட்ச நடவடிக்கையாக கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தப்பட்டது. கடுமையான காயம் யாருக்கும் இல்லை. அலங்காநல்லூரை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.