Published : 25 Nov 2014 09:08 PM
Last Updated : 25 Nov 2014 09:08 PM

கருப்பின இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்ற விவகாரம்: அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கலவரம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து பெர்குசன் நகரில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

பல இடங்களில் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வீச்சு, தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறையில் போலீஸ் கார்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

பெர்குசன் நகரில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டம், நியூயார்க், சிகாகோ நகரங்களுக்கும் பரவியுள்ளது. அந்நகரங்களிலும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே அங்கும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

வன்முறைக்கு காரணம்

மிசவுரி மாகாணம் பெர்குசன் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை இன போலீஸ் அதிகாரியான டேரன் வில்சன், 18 வயது கறுப்பின இளைஞர் மைக்கேல் பிரவுனை சுட்டுக் கொன்றார். திருட்டு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக பிரவுனை கைது செய்ய சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டபோது பிரவுன் ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை. எனவே வெள்ளை இன போலீஸ் அதிகாரி டேரன் வில்சன், வேண்டுமென்றே கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழங்கு மிசவுரி மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய தேவையில்லை நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெர்குசன் நகர வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திலேயே போராட்டம் வன்முறையாக வெடித்தது. கல்வீச்சு, தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எனினும் வன்முறை முடிவுக்கு வரவில்லை. நகரின் வெவ்வேறு பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அப்பகுதிக்கு போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூயார்க், சிகாகோ ஆகிய நகரங்களிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்க போலீஸார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x