

சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், திமுக கொறடா சக்கரபாணி எழுந்து துரைமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து பேச முயன்றார். அவருக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.
பேரவைத் தலைவர் ப.தனபால்:
அவையில் பேசி முடிவெடுக்கப்பட்டதைப் பற்றி மீண்டும் பேச அனுமதிக்க முடியாது. (திமுகவினர் தொடர்ந்து பேச அனுமதி கேட்டு குரல் கொடுத்தனர்)
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
அவையின் குழு ஒரு பொருள் பற்றி விவாதித்து, முடிவு எடுக்கப்பட்டு, பேரவைத் தலைவர் அதை அறிவித்திருக்கிறார். அதுபற்றி விவாதிக்க விதிகளில் இடம் இல்லை. (திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
பேரவைத் தலைவர்:
அவை முன்னவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். எனவே அதைப் பற்றி விவாதிக்க சட்டவிதிகளில் இடம் இல்லை. இது தெரிந்தும் வேண்டுமென்றே கலாட்டா செய்ய வந்தீர்களா?
(அப்போது அதிமுக உறுப்பினர்கள் உரத்த குரலில் திமுகவினரைப் பார்த்து ஏதோ கூறினர். இதனால் அவையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது)
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
உங்களுக்குப் பேரவை விதி தெரியாதா? வேண்டுமென்றே இப்படி செய்கிறீர்களா?
இவ்வாறு அமைச்சர் கூறியதும் ஜெ.அன்பழகன், மைதீன்கான் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கி வேகமாகச் சென்று அவரிடம் வாதிட்டனர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் உரத்த குரலில் கூச்சலிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து, ‘அவையை நடத்த விடாமல் பிரச்சினை செய்வதால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்’ என்று அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அவைக் காவலர்கள் வந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர். மைதீன்கான், பேரவைத் தலைவர் இருக்கையின் அருகே படுத்துக் கொண்டார். அவரை காவலர்கள் பெரும் சிரமத்துக்கிடையே குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். பின்னர் திமுக உறுப்பினர்கள் லாபியில் நின்றும் கோஷம் போட்டனர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்தும் வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதையடுத்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லம் பாஷா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
புறக்கணிக்க முடிவு
பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவது ஜனநாயக விரோத செயல். எனவே, இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.