Published : 03 Jul 2016 09:16 AM
Last Updated : 03 Jul 2016 09:16 AM

இன்னும் எத்தனை சுவாதிகளை பலி கொடுக்கப் போகிறோம்?

‘சிறுவனை ஏன் கொலை செய்தேன் என்று யாராவது குழம்பினால், அவன் சிறுவன்.. கொலை செய்ய எளிதாக இருந்தான் என்று சொல்வேன்’ - அனுராக் காஷ்யாப்பின் ‘ராமன் ராகவ்’ திரைப்படத்தில் வரும் வசனம் இது. நாம் கடந்து வந்துகொண்டிருக்கும் பெண்களின் கொலைகளை பார்க்கும்போதும் இப்படிதான் தோன்றுகிறது. சுவாதி கொலை வழக்கில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்திருக்கிறது.

சேலம் வினுபிரியாவின் தற்கொலையில் குற்ற உணர்ச்சி தாங்காமல் கைகூப்பி மன்னிப்பு கேட்கிறார் காவல்துறை உயர் அதிகாரி. வினோதினி மீது ஆசிட் வீசி கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம். குற்றவாளியை கைது செய்து தண்டனை வழங்குவதாலும் காவல்துறை அதிகாரி மன்னிப்பு கேட்பதாலும் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியுமா? கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம்.

சிதறும் குடும்பங்கள்

கடந்த 1998-ம் ஆண்டு எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷாவை ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று தண்ணீர் பிய்ச்சியடித்து விரட்டியது. மிரண்டு ஓடியவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார். பத்து ஆண்டுகள் கழித்து 2008-ம் ஆண்டு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், “பெண்கள் மீதான வன்முறைகளை தவிர்க்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க வேண்டும்” என்றது.

அதன்பிறகு 8 ஆண்டுகள் கழித்து, சுவாதி கொலையிலும் அதையேதான் சொல்கிறது நீதிமன்றம். நீதிமன்றங்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றன. அரசுகள்தான் அசையவில்லை.

2000-ம் ஆண்டு பிப்ரவரியில் தருமபுரியில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். பேருந்தைச் சுற்றி அலைபாய்ந்து ஓடிய அந்தப் பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறிய காட்சியை எப்போதும் மறக்க முடியாது. கடைசியில் என்ன ஆனது? 16 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. காயத்ரியின் தந்தை வெங்கடேசன் தனக்கு நீதி மறுக்கப்பட்டதாக கண்ணீர் விடுகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவி சுகன்யா, பள்ளியில் இருந்த கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளானார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் கலவரம் வெடித்தது. பேருந்துகள், கடைகள் சூறையாடப்பட்டன. ஓமலூரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. நிலைமை மாறியதா?

10 ஆண்டுகள் கழித்து 2016-ல் கள்ளக்குறிச்சி தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் சரண்யா, ப்ரியங்கா, மோனிஷா என 3 மாணவிகள் கிணற்றில் இறந்துகிடந்தனர். அடுத்த சில நாட்களிலேயே கோவையில் உள்ள ஒரு கல்லூரியின் கிணற்றில் திவ்யா என்பவர் இறந்துகிடந்தார்.

ஆசிட் வீச்சில் அழிந்த குடும்பங்கள்

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பரில் தனது தந்தையுடன் காரைக்காலில் நடந்து சென்றுகொண்டிருந்த வினோதினி மீது பட்டப்பகலில் ஆசிட்டை வீசினார் சுரேஷ்குமார். சுமார் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் உடல் வேதனையில் அலறித் துடித்த வினோதினி இறந்துபோனார். வினோதினியின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

ஆனால், அவரது குடும்பம் என்ன ஆனது என்று யாருக்காவது தெரியுமா? சின்னாபின்னமாக சிதறிவிட்டது அது. வினோதினியை மறக்க முடியாமல் அவரது தாய் சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டார். வினோதினிக்காக வந்த உதவித் தொகை சுமார் 50 லட்சத்துடன் சிலர் தலைமறைவாகிவிட்டனர். மகளையும் மனைவியையும் இழந்து அனாதையாக அல்லாடுகிறார் வினோதினியின் வயதான தந்தை ஜெயபாலன்.

வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட சில நாட்களில் சென்னை ஆதம்பாக்கத்தில் வித்யா என்ற பெண் மீது ஆசிட் வீசினார் இளைஞர் விஜயபாஸ்கர். சில நாட்களில் வித்யாவும் இறந்துபோனார். வினோதினி மீதான தாக்குதல் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், நிலைமை மாறவில்லையே... மீண்டும் 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் சீர்காழியில் இளம்பெண் சுபா மீது தங்கபாண்டியன் என்பவர் ஆசிட்டை ஊற்றினார்.

மும்பையில் வசித்த பேச்சிமுத்துவுக்கு 2 பெண் குழந்தைகள். கணவர் இறந்துவிட, அண்டை மாநிலத்தில் தனது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்று தாய்மண்ணான தூத்துக்குடி கிளாக்குளம் கிராமத்துக்கு வருகிறார் அவர். அங்கன்வாடியில் வேலை பார்த்தவர், தனது சக்திக்கு மீறி செலவு செய்து தனியார் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைத்தார். 12 வயதான மூத்த மகள் புனிதா, பள்ளி விட்டு வரும் வழியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது நடந்தது 2012 டிசம்பர் மாதம். அது, டெல்லி மாணவி நிர்பயாவின் கொலைக்காக நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம். புனிதா கொலை வழக்கில் ஆஜராக அரசு வழக்கறிஞர் இல்லாததால் பல மாதங்கள் வழக்கை தொடரவே முடியவில்லை.

அதே 2012 நவம்பரில் உளுந்தூர் பேட்டை அருகே காந்தலவாடி கிராமத்தில் கல்லூரி மாணவி ப்ரியா, குளக்கரையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தனது தோழி சரண்யாவின் காதல் திருமணத்துக்கு உதவி செய்ததாக கூறி அவரை கொலை செய்தது சாதி வெறிக் கும்பல். அடுத்த மாதமே சிதம்பரம் அருகே சம்பந்தம் கிராமத்தில் சந்தியா என்ற 20 வயது பெண்ணை பாலியல் வன் முறை செய்த கும்பல், அவரை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தது.

2014-ம் ஆண்டு சென்னை சிறுசேரி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்த உமாமகேஸ்வரியை ஒரு கும்பல் அவரது நிறுவனத்தின் அருகேயே பாலியல் வன்முறை செய்து கொடூரமாக கொன்று வீசியது.

இப்படி இவர்கள் மட்டுமல்ல.. மதுரை லீலாவதி, கடலூர் கீழ்குமாரமங்கலம் விக்டோரியா, கோ.ஆதனூர் பொன்னருவி, மேலப்பாளையம் சகுந்தலா, செல்லஞ்சேரி சிவகாமி, திருச்செங்கோடு விஷ்ணுப்ரியா, புதுச்சேரி பார்வதி ஷா, ஏற்காடு விஜயலட்சுமி.. என காலத்தின் தீராத பக்கங்களில் முடிவில்லாமல் தொடர்கின்றன கொலை செய்யப்படும் பெண்களின் துயரங்கள்.

மறந்துபோகும் சமூகம்

சுவாதி கொலை வழக்கில் பொதுவெளி எங்கும் உணர்ச்சியின் வேகத்தை பார்க்க முடிகிறது. ரயில் நிலையத்தில் இருந்தவர்கள், கற்களை எறிந்து சுவாதியை காப்பாற்றி இருக்கலாம் என்கின்றனர். கொலையாளியை கண்டந்துண்டமாக வெட்டிப் போட வேண்டும் என ஆவேசிப்படுகின்றனர். தலைவர்கள் சுவாதியின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். போராட்டங்கள் நடக்கின்றன. இந்தக் கொலை மட்டுமல்ல, எந்த ஒரு பெரிய பிரச்சினை தலைதூக்கும்போதும் சில நாட்கள் மொத்தமாக எதிர்வினையாற்றிவிட்டு மறந்துபோவது நம் சமூகத்தின் வழக்கமாகிவிட்டது.

தினமும் அழுதுகொண்டிருக்க முடியுமா என்று கேட்கும் யதார்த்தம் புரிகிறது. தினமும் அழ வேண்டாம். இதுபோன்று ஒரு நிகழ்வு நடக்கும்போது மட்டும் வினையாற்றுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதன் நீட்சியாக பிரச்சினையின் நூல் பிடித்து அடுத்தடுத்த தீர்வுகளை நோக்கி நகரலாம் இல்லையா? பெண்களிலேயே பாகுபாடுகளும் மிக அதிகம். டெல்லி நிர்பயாவுக்காக மெரினாவில் மெழுகுவர்த்தி ஏற்றிய சமூகம், அதே வாரத்தில் கொல்லப்பட்ட தூத்துக்குடி புனிதாவுக்காக என்ன செய்தது?

தாய் என்பவள் தெய்வமா?

நம் வீட்டில் இருந்தே தீர்வுகளை நோக்கி நகரலாம். நிலவுடமை தொடங்கிய காலகட்டத்தில் இருந்து பெண்களுக்கென்று நம் சமூகம் வகுத்திருக்கும் வரையறைகளை மறுபரிசீலனை செய்வோம். பூமித்தாய், கடல் தாய், பாரதத் தாய், தமிழ் தாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பெண்ணாக்கி, ‘அந்தப் பெண்ணின் தாய்மை என்கிற வடிவமே பரிபூரணம் ; தாய்மை அடையாத பெண் பூரணமானவள் அல்ல. தாயே தெய்வம்’ என்று வரையறுத்துவிட்டார்கள்.

முதலில் பெண்களுக்காக நம் சமூகம் தயார் செய்து வைத்திருக்கும் பிம்பங்களை மாற்ற முற்படுவதே பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வாக அமையும். தாய் என்பவள் தெய்வமும் அல்ல; காதலி என்பவள் தேவதை யும் அல்ல. அவர்களும் உங்களைப் போலவே அழுக்கும் மணமும் ஒருசேர பெற்றவர்கள்தான். உங்களைப்போல நகமும் சதையுமான சக மனிதர்கள்தான்.

குழந்தைகளுக்கு கற்பிப்போம்

இவை எல்லாவற்றையும்விட குழந்தைகளை வளர்த்தெடுப்பதில்தான் முழுமையான தீர்வு அடங்கியிருக்கிறது. குடும்பத்தில் மனைவியை கணவன் அடிப்பது, அதிகாரம் செய்வது போன்ற செயல்கள் எல்லாம் பெண் என்பவள் ஆணால் ஆளப்படுவதற்கானவள் என்கிற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் ஆழப் பதியச் செய்துவிடுகிறது. இதன் முற்றிய வடிவம்தான் ஆணால் ஆளப்பட முடியாமல் போகும் பெண்ணை கொலை செய்வதில் முடிகிறது.

வேலைகளில் ஆண் வேலை, பெண் வேலை என்று எதுவும் இல்லை. சூழலைப் பொறுத்து அனைத்து பணிகளையும் சரி சமமாக பகிர்ந்துகொள்ளுங்கள். மனைவியை மட்டுமின்றி அனைத்துப் பெண்களை விளிக்கும்போது மரியாதையாக பேசுங்கள். அந்தப் பழக்கம் உங்கள் குழந்தைக்கும் தொற்றிக்கொள்ளும். பொருட்கள் வாங்கித் தருவதில் தொடங்கி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்ட வேண்டாம். குடும்பத்தில் இதுபோன்ற சூழல்களுடன் பள்ளி, கல்லூரிகளில் நன்னடத்தை போதனைகளை நம் குழந்தைகள் கற்கும்போது மட்டுமே எதிர்காலத்தில் பெண்கள் மீதான வன்முறைகளை தவிர்க்க இயலும். அதுதான் உண்மையான முன்னேறிய சமூகமாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x