

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக விவே கானந்தா அரங்கில் நேற்று நடை பெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா தலைமை தாங்கினார். இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 138 பேருக்கு ஆளுநர் ரோசய்யா தங்கப் பதக்கங்களையும், பட்டச் சான்றிதழ்களையும் வழங்கினார். பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை உள்ளிட்ட படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 5 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பட்டமளிப்பு விழா உரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து பல்வேறு நிலைகளில் முன் னேற்றம் அடைந்துள்ள போதிலும் வறுமையும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. வறுமை அளவு குறியீட்டில் 76 நாடுகளில் இந்தியா 55-வது இடத்தில் உள்ளது கவலையளிக்கிறது.
இந்தியாவில் 64 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள். தமிழக விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் நல்ல முறையில் விவசாயம் செய்து தானிய உற்பத்தியை அதிகப் படுத்தியுள்ளனர். தமிழகத்தில் நெல் உற்பத்தி 265 மில்லியன் டன் ஆகவும், பால் உற்பத்தி 140 மில்லியன் டன் ஆகவும் இருப்பதற்கு காரணமான விவ சாயிகள் பாராட்டுக்குரியவர்கள்.
நாட்டில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பல்கலைக் கழங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது. உயிரி தொழில்நுட்பம், மருத்துவ உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர தொழில்நுட்ப துறைகளிலும் அது தன் பங்களிப்பை செய்து வருகிறது.
ஜவுளித்துறையும், தோல்துறை யும் தமிழகத்தின் முக்கிய இரு தொழில்துறைகள் ஆகும். ஆனால், இவை இரண்டும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன. உணவு உயிரி தொழில்நுட்பமானது சர்ச்சைக்குரிய தொழில்நுட்பம் ஆகும். இதுதொடர்பாக இன்னும் தெளிவான கொள்கைகள் வரை யறுக்கப்படவில்லை. இதுகுறித்த கள ஆய்வு பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை. இவ்வாறு எம்.எஸ். சுவாமிநாதன் கூறினார்.
முன்னதாக, துணைவேந்தர் எம்.ராஜாராம் வரவேற்று ஆண் டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில், சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பதிவாளர் எஸ்.கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.வெங்கடேசன், பேராசிரியர் கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.