

கதிராமங்கலத்தில் வாழும் மக்களைவிட போலீஸாரும், அரசு அதிகாரிகளுமே அதிகம் உள்ளனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அய்யனார் கோயில் திடலில் நேற்று அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த அவர், மக்கள் மத்தியில் பேசியதாவது: கதிராமங்கலத்தில் வாழும் பொதுமக்களைவிட காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும்தான் இங்கு அதிகம் காணப்படுகின்றனர். மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அரசு திணிக்கக் கூடாது.
இவ்வூரில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம் இதுபோன்ற பணிகளை குடியிருப்புகள், விவசாய நிலங்களில் நடத்தக் கூடாது. இதைத் தட்டிக் கேட்பவர்களை காவல் துறையினரால் அடக்குவது நல்ல அரசுக்கு அடையாளம் அல்ல.
கதிராமங்கல மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க நினைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனம் இங்கிருந்து அகற்றப்பட வேண்டும். என்றார்.