Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

சூடுபிடிக்கிறது ஏற்காடு தேர்தல் களம்

இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடவிருப்பதால் ஏற்காடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 28-ம் தேதி ஏற்காட்டில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தரப்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரும் அங்கு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடை பெறுகிறது. நாடாளுமன்ற இடைத்தலுக்கு முன்பு நடைபெறவுள்ள கடைசி தேர்தல் இது என்பதால், அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை சோதித்துப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பாக இது அமையும். எனினும் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் இந்த இடைத்தேர்தலை பல்வேறு காரணங்களால் தவிர்த்து விட்டன.

எப்படியும் களம் காணும், கடும் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, புதுடெல்லி சட்டசபைத் தேர்தலில் கவனத்தை திருப்பி இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டது. அதேபோல் வன்னியர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் பாமகவும் போட்டியிடவில்லை.

இதனால், இரு திராவிட கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இவ்விரு கட்சியினரும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், சில வாரங்களுக்கு முன்பு அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

முதல்வர் பிரச்சாரம்

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து வரும் 28-ம் தேதி ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவர், மின்னாம் பள்ளி, (வழி– காரிப்பட்டி, கருமா புரம், மேட்டுப்பட்டி, எம். பெரு மாபாளையம், டோல்கேட்), வெள்ளாள குண்டம் பிரிவு, (வழி– காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு), வாழப்பாடி பேருந்து நிலையம், (வழி – பேளூர் சாலை பிரிவு, துக்கியாம் பாளையம், அத்தனூர்பட்டி) மற்றும் பேளூர் கருமந்துறை பிரிவு ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், (வழி–பள்ளத் தாதனூர், நடுப்பட்டி) ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பின்னர், நீர் முள்ளிக்குட்டை, (வழி– ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு), கூட்டாத் துப்பட்டி, (வழி– சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம் பாளையம், குள்ளம்பட்டி பிரிவு) வலசையூர், (வழி–ராமர் கோவில்), அயோத்தியாப் பட்டினம், உடையாப்பட்டி என 9 இடங்களில் பேசுகிறார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

இதேபோல் தி.மு.க.வின் மூத்த தலைவர்களும் வரும் வாரத்தில் ஏற்காடு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். முதல்வர் செல்வதற்கு இரு தினங்களுக்கு முன்பு அங்கு செல்லும் மு.க. ஸ்டாலின், டிசம்பர் 2-ம் தேதி வரை தங்கியிருந்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, கனிமொழி எம்.பி.யும் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தொகுதி முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். இதனால் ஏற்காடு தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் இடைத் தேர்தலில் ஆளும்கட்சி தொடர்ந்து வெற்றி பெறுவது வாடிக்கையாகிவிட்டாலும், பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் தேர்தல் என்பதால் தங்களது பலத்தை நிரூபிக்க தி.மு.க.வினரும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதனால், வரும் நாட்களில் அங்கு பிரச்சாரம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

துணை ராணுவப்படை பாதுகாப்பு: திமுக மனு

ஏற்காடு இடைத்தேர்தலுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு வேண்டும் என்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலர் ஆர்.எஸ். பாரதி , தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனு:

ஏற்காடு தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. மலைப் பகுதியில் 12 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளை கைப்பற்றவும் சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே அங்கு துணை ராணுவப்படையினரைப் பணியில் அமர்த்தி, தொகுதியின் நான்கு எல்லைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x