

சென்னை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட7 பேரை விடுதலை செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெய லலிதா புதன்கிழமை அறிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் தமிழக அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. தனது மகன் பேரறிவாளனை விடுவிக்குமாறு அவரது தாய் அற்புதம் அம்மாள், கடிதம் வாயிலாக என்னைக் கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டப்பேரவை யில் தீ்ர்மானம் கொண்டு வந்தேன். ‘தமிழக மக்களின் உணர்வுகளுக் கும், அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சுதேந்திர ராஜா என்ற சாந்தன், ஹரன் என்ற முருகன் மற்றும் பேரறிவாளன் என்ற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது’ என்ற தீர்மானத்தை பேரவையில் நானே முன்மொழிந்தேன். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது இரண்டரை ஆண்டுகளாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், தங்களது கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும்; தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, இவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றாலும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி வந்தவுடன், இதுகுறித்து உடனடி யாக விரிவாக விவாதித்தேன். அதன் பின், புதன்கிழமை காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
3 நாளில் முடிவு
இருப்பினும் இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்கப்பட்ட தால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தைப் பெறும் வகையில், தமிழக அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7 பேரும் விடுவிக்கப்படுவர்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.