Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

ராஜராஜ சோழன் எங்க சாதி.. பங்காளி ஊரு மாப்ளே - வரிந்துகட்டி சாதிச் சங்கத்தில் உறுப்பினராக்கும் அமைப்புகள்

‘ராஜராஜ சோழ உடையார்.. சோழர்குல படையாச்சியார்.. ராஜராஜ சோழ தேவேந்திரர்.. வன்னியர்குல சத்திரிய பேரரசன்..’ - இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1028வது சதய விழாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பளிச்சிட்ட வாசகங்கள்தான் இவை!

நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் வரிசையில், கடல் கடந்து சைவத்தையும் தமிழையும் பரப்பிய ராஜராஜ சோழனையும் சாதி வட்டத்துக்குள் அடைத்துவிட்டார்கள். உடையார் என்றும் தேவர் என்றும் தேவேந்திரர் என்றும் ஆளாளுக்கு ராஜராஜ சோழனுக்கு சாதி முத்திரை குத்தியதால் இந்த ஆண்டு சதய விழா பதற்றத்துடனேயே கடந்திருக்கிறது.

‘பரம்பு மன்னனின் பேரன் ராஜராஜ சோழன்..’, ‘உடையார்  ராஜராஜ சோழத் தேவருக்கு..’ என்று கல்வெட்டுகளில் காணப்படுவதை வைத்து ராஜராஜனை ‘எங்காளு’ என்கிறது உடையார் (பார்கவகுலம்) சமூகம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பார்கவ குல இளைஞர் முன்னேற்றப் பேரவை செயலாளர் சசிகுமார், ‘‘ராஜராஜன் உடையார்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கு. எங்கள் வம்சத்தைச் சேர்ந்த பரம்பு மன்னனின் பேரன்தான் ராஜராஜசோழன். வர்ணாசிரம தர்மப்படி தேவேந்திரர்களோ, முக்குலத்தோரோ சத்திரியர்களாக இருந்திருக்க முடியாது. அப்படி இருக்க, ராஜராஜன் எப்படி அந்த சாதிகளைச் சேர்ந்தவராக இருக்க முடியும்?’’ என்றார்.

விஜயாலய சோழத் தேவர் எங்க ஊரு மாப்ளே!’

‘‘ராஜராஜன் 48 சிறப்புப் பட்டங்களை உடையவர். இந்த ‘உடையவர்’ என்பது தான் காலப்போக்கில் ‘உடையார்’ என்றாகிவிட்டது. ஆனால், கல்வெட்டுக்களை முழுமையாக படித்துப் பார்த்தால் ‘ராஜராஜ சோழத் தேவர்’ என்று இருப்பதை அறியமுடியும்’’ என்கிறார் சோழ மண்டலத்து முக்குலத்தோர் சமுதாய மக்கள் அமைப்பைச் சேர்ந்த சிவகுருநாதன். ‘‘விஜயாலய சோழனுக்கு வலங்கைமான் அருகிலுள்ள ஊத்துக்காட்டில் வானவன்மாதேவி என்ற பெண்ணைத்தான் திருமணம் முடித்தார்கள். அந்தப் பெண்ணின் வம்சாவழியினர் எனக்கு உறவுமுறை. விஜயாலய சோழன் எங்க ஊரு மாப்ளே’’ என்கிறார்.

‘உடையார், தேவர் என்பதெல்லாம் சாதியில்லை’

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலர் தியாககாமராஜ், ‘‘உடையார், தேவர் என்பதெல்லாம் ராஜராஜனின் மறு பெயர்கள். சாதி அல்ல. ராஜராஜன் தேவேந்திரகுலத்தில் வந்தவன் என்பதை நாங்கள் தக்க சான்றுகளுடன் விவாதிக்கத் தயாராய் இருக்கிறோம்’’ என்றார்.

‘சத்திரிய சாதி வன்னியர்கள் மட்டும்தான்!’

வன்னியர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறு. அண்ணல் கண்டர், ‘‘தமிழகத்தில் சத்திரியன் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சாதி வன்னியர். சோழ மன்னர்களுக்கு சிதம்பரம் நடராஜர்

கோயிலில்தான் முடிசூட்டு விழா நடப்பது வழக்கம். இன்று வரை சிதம்பரம் கோயிலில் முடிசூட்டும் ஒரே குடும்பம் வன்னியர்களான பிச்சாவரம் பாளையக்காரர் குடும்பம். நடராஜர் கோயிலில் இப்ப வரைக்கும் சோழர் மண்டகப்படின்னு மண்டகப்படியே நடத்திக்கிட்டு வர்றாரு. சகல சம்பத்துக்களும் உடையவர் என்பதால் ராஜராஜனை உடையார் என்றும் அனைவருக்கும் மேலானவன் என்பதால் தேவர் என்றும் அழைத்தார்கள். இந்த உண்மை தெரியாமல் அவரை தேவர் சாதியிலும் உடையார் சாதியிலும் சேர்ப்பது பிதற்றல்’’ என்கிறார்.

‘அவலத்தை முளையிலேயே கிள்ளணும்’

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கருத்து வேறாக இருக்கிறது. ‘‘ராஜராஜன் இந்துப் பேரரசன். அதனால்தான் தன்னை சிவபாத சேகரன் என அழைத்துக் கொண்டான். அவரை சாதிக்குள் அடைப்பது அநியாயம்; அக்கிரமம். அருண்மொழித் தேவன் என்று இருப்பதால் அவரை தேவர் சாதி என்கிறார்கள். பெரிய கோயிலைக் கட்டியதால் ராஜராஜனுக்கு பெருந்தச்சன் என்ற

பட்டம். இதனால் தச்சர்கள் எல்லாம், ‘ராஜராஜன் எங்காளு’ என்கிறார்கள். தேவேந்திரகுலத்தினர், ‘ராஜராஜன் மல்லர் குலத்தைச் சேர்ந்தவர்’ என்கிறார்

கள். இதைவிட அபத்தம் என்னவென்றால், ‘சாதி இரண்டொழிய வேறில்லை’னு சொன்ன அவ்வைப் பாட்டியையே ‘மள்ளத்தி’ என்று சாதிய வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ராஜராஜ சோழனையும் சாதிய வட்டத்துக்குள் கொண்டுவரும் அவலத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’’ என்றார்.

தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்துவரும் வரலாற்றுப் பேராசிரியர் குடவாயல் பாலசுப்பிரமணியனிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டதற்கு, ‘‘இதுதொடர்பாக இன்னும் நிறைய ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது. ஆய்வின் முடிவில்தான் பதில் கிடைக்கும்’’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ராஜராஜ சோழனுக்கும் இது சோதனையான காலகட்டம்தான் போலிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x