Published : 21 Jul 2016 08:59 AM
Last Updated : 21 Jul 2016 08:59 AM

‘கபாலி’படத்தை வெளியிட தடை கோரி வழக்கு: ரஜினிகாந்த், தாணுவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

‘லிங்கா’ படத்துக்கான நஷ்டஈட்டை தராததால் ‘கபாலி’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி விநியோகஸ்தர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். இந்த வழக்கில் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சுக்ரா பிலிம்ஸ் நிறுவனப் பங்குதாரர் மகாபிரபு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட் டங்களில் விநியோகம் செய்யும் உரிமையை ரூ.13 கோடியே 25 லட்சம் கொடுத்து எங்கள் நிறுவனம் பெற்றது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் எங்கள் நிறு வனத்துக்கு ரூ.7 கோடியே 45 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதேபோல பல்வேறு விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் எங்களுக்கு நஷ்டஈடு வழங்கும்படி ‘லிங்கா’ படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அனைவரும் கோரினோம்.

இப்படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், எங்களுக்கு இழப்பீடு தருவதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வில்லை. இதற்கிடையே அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் திரை யரங்கு உரிமையாளர்களுக்கு ரஜி னிகாந்த்தும், ராக்லைன் வெங்க டேஷும் சேர்ந்து ரூ.12 கோடியே 50 லட்சத்தை இழப்பீடாக கொ டுத்தனர்.

அப்போது கோவை மண்டலத் துக்கு ரூ.2 கோடியே 59 லட்சம் தரப்பட்டது. அத்தொகையில் ரூ.1 கோடியே 70 லட்சத்தை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட் டங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுத்து விட்டனர். எங்கள் நிறுவனத்துக்குத் தர வேண்டிய ரூ.89 லட்சத்தை இதுவரை தரவில்லை.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் ஜூலை 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிக்கும்போதே எங்களுக்கு தரவேண்டிய ரூ.89 லட்சத்தைக் கொடுத்துவிடுவதாக இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உத்தரவாதம் அளித் திருந்தார். அதன்படி பணத்தை தரவில்லை. எனவே, ‘லிங்கா’ படத்தை விநியோகித்ததால் எங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ் டத்தை கொடுக்கும் வரை ‘கபாலி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இம்மனுவை விசாரித்து, நடிகர் ரஜினிகாந்த், தயா ரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், வேந்தர் மூவிஸ் நிறுவனம் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று (வியாழக் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x