

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலிக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நீதிபதி கங்குலிக்கு ஆதரவாகவும், நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், கங்குலிக்கு எதிராக பாலியல் புகார்கள் கூறுவோரைக் கண்டித்
தும் முழக்கங்களை எழுப்பிய வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வளாகத்தினுள் பேரணியாகச் சென்றனர். பின்னர் என்.எஸ்.சி.
போஸ் சாலையில் நீதிபதி கங்குலிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் கூறியதாவது:
நீதிபதி கங்குலி, தனது பதவிக் காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளை அளித்துள்ளார். அந்தத் தீர்ப்புகளால் பாதிக்கப்பட்ட சிலரின் தூண்டுதல் காரணமாக தற்போது அவருக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. ஓய்வுபெற்ற நீதிபதியை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.
கங்குலி மீது கூறப்படும் இத்தகைய புகார்களை சுதந்திரமான நீதித்துறை செயல்பாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் கருதுகிறது. இத்தகையப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், தனித்தன்மையுடன் இயங்கி வரும் நீதித்துறையின் செயல்பாடுகளை அரசியல்வாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலை ஏற்படும். இதுபோன்ற ஆதாரமற்ற புகார்களை தொடர்ந்து அனுமதித்தால், நேர்மையான நீதிபதிகள் பாதிக்கப்படுவர். நடுநிலையுடன் தீர்ப்பு எழுத முடியாத வகையில் நீதிபதிகள் மிரட்டப்படுவர். இதனால் இந்திய நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படும்.
அதனால்தான் நீதிபதி கங்குலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கண்டித்து எங்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் வழக்கறிஞர்களின் போராட்டம் தேசம் தழுவிய அளவில் தீவிரமடையும்.
இவ்வாறு பிரபாகரன் கூறினார்.