

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.336 கோடியே 13 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
பயன்படுத்திய காகிதங்களிலிருந்து மையினை நீக்கம் செய்து நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் காகித கூழ் தயாரிக்கும் இயந்திரத்தை கரூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிறுவியுள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 100 டன் மர காகித கூழ் இறக்குமதி செய்வது தவிர்க்கப்படும். இந்த காகித கூழ் தயாரிக்கும் பிரிவை கோடநாடு முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திங்கள்கிழமை (டிச. 30) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஆலையின் மின் உற்பத்தியை 81.12 மெகாவாட்டிலிருந்து 103.62 மெகாவாட்டாக உயர்த்தும் வகையில் புதிய கொதிகலனையும், மின் ஆக்கியையும் நிறுவியுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 5 மெகாவாட் உபரி மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்யப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 2,500 டன் நிலக்கரி நுகர்வும், நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் உபயோகமும் குறையும்.
இந்தப் புதிய கொதிகலன் மற்றும் மின் ஆக்கி மூலம் மின் உற்பத்தி பிரிவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
லாபத்தில் சுமார் 3 சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்கு காகித நிறுவனம் செலவிட்டு வருகிறது. அதன்படி, கரூர் காகித ஆலைக்கு அருகில் உள்ள நாணப்பரப்பு, மூர்த்திபாளையம், தன்னாசிகவுண்டன்புதூர், துண்டுபெருமாள்பாளையம் ஆகிய 4 கிராமங்களுக்கு ரூ.88 லட்சத்து 34 ஆயிரம் செலவில் காகித ஆலையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் ஜெய லலிதா தொடங்கி வைத்தார்.
மேலும், காகித நிறுவனத்தால் காகிதபுரத்தில் ரூ.4 கோடி செலவில் அமைப்பட்டுள்ள டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையக் (ஐ.டி.ஐ.) கட்டிடம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் டி.என்.பி.எல். சார்பில் ரூ.25 லட்சத்து 6 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை அறை மற்றும் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங் கேற்றனர்.