

விழுப்புரத்தையடுத்த விக்கிர வாண்டியில் ம.தி.மு.க.வின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஏ.கே.மணி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் டாக்டர் ஆர்.மாசிலாமணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டுவோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் எங்களுக்கு மிக முக்கியமான இலக்கு.
என் வாழ்நாள் கனவு தனி ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்பது. அது நிச்சயம் நிறைவேறும்.இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட பிரிட்டன் அதிபர் டேவிட் கேம்ரூன் போர்க்குற்றம் குறித்த விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். இதுதான் இலங்கைக்கு ஆரம்பம். இனிமேல் அங்கு நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று வைகோ பேசினார்.
இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் ரூ.28 லட்சத்துக்கு 73 ஆயிரமும், புதுச்சேரி சார்பில் ரூ. 7 லட்சத்துக்கு 55 ஆயிரமும் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டன.
முன்னதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ பேசியது:
இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் ஈழத்தின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
தமிழர்கள் தங்கள் கணவர், மகன்களை 5,7 ஆண்டுகளாக காணவில்லை. நிலம், வீடுகளை இழந்து விட்டோம் என்று கதறி அழுதனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும். தொகுதி பற்றி இப்போது கூற முடியாது. தேர்தல் களத்தில் போராடி வெற்றி பெறுவோம் என்று வைகோ பேசினார்.